தமிழகம்

தமிழகத்தில் கூட்டணி குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை: பொன்.ராதாகிருஷ்ணன்

செய்திப்பிரிவு

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணி இன்னும் முடிவு செய்யவில்லை என்று மாநில பா.ஜ.க. தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

நாடாளுமன்றத் தேர்தலை யொட்டி தமிழகத்தில் திமுக, அதிமுக தவிர்த்து மற்ற கட்சிகளை பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியில் இணைக்கும் பணியில், காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் ஈடுபட்டுள்ளார். பா.ஜ.க. அணியில் பாமக, மதிமுக கட்சிகள் இணையும் என்றும்,தேமுதிகவை இணைப்பது குறித்து பேச்சு நடந்து வருவதாகவும் அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில்,சென்னையில் வெள்ளிக்கிழமை நிருபர்களுக்கு பா.ஜ.க. மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டி:

தமிழகத்தில் கூட்டணி குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. தேசப் பற்றுடன் தேசத்தில் ஒற்றுமை வேண்டும் என்ற நோக்கத்தில், தமிழருவி மணியன் அனைத்துத் தரப்பினரையும் ஒன்று சேர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

ஒற்றுமை ஓட்டம்

குஜராத்தில் சர்தார் வல்லபாய் படேலுக்கு, உலகிலேயே அதிக உயரமான சிலை அமைக்க, நரேந்திர மோடி தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது. அதற்காக தேசிய அளவில் அனைத்து தரப்பு மக்களின் ஆதரவுடன் இரும்பு சேகரிக்கும் பணி நடக்கிறது. இதை விளக்கி, ’வீடு தோறும் மோடி, உள்ளம் தோறும் தாமரை’என்ற பெயரில், 700 கிராமங்களில் யாத்திரை நடத்தியுள்ளோம். சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கான முக்கியத்துவத்தை உணர்த்த, வரும் 15-ம் தேதி நாடு முழுவதும் ஒற்றுமை ஓட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பா.ஜ.க. மாநில செயலாளர் வானதி சீனிவாசன் கூறும்போது, ‘‘தமிழகத்தில் 64 இடங்களில் ஒற்றுமை ஓட்டம் நடக்கும். சென்னையில் கண்ணகி சிலை முதல் கலங்கரை விளக்கம் வரை ஒற்றுமை ஓட்ட நிகழ்ச்சி நடைபெறும். இதில் ஓட முடியாதவர்கள் நடக்கலாம்’’ என்றார்.

காங்கிரஸை வீழ்த்த வேண்டும்

பேட்டியின்போது உடனிருந்த தமிழருவி மணியன், ‘‘திமுக, அதிமுகவுக்கு மாற்றான அணியை கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழர்களுக்கு துரோகம் செய்த காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் ஒரு இடம்கூட கிடைக்காமல், அதை வீழ்த்த வேண்டும் என்பதே லட்சியம்’’ என்றார்.

SCROLL FOR NEXT