தமிழகம்

மவுலிவாக்கம் விபத்து எதிரொலி: சென்னையில் விற்காமல் இருக்கும் 30 ஆயிரம் வீடுகள்

டி.செல்வகுமார்

சென்னை புறநகரில் அமைந்துள்ள மவுலிவாக்கத்தில் கட்டப்பட்டுக் கொண்டிருந்த 11 மாடி கட்டிடம் கடந்த ஜூன் 28-ம் தேதி இரவு திடீரென இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 61 பேர் பலியானார்கள். 27 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.

இந்த துயர சம்பவம், கட்டுமானத் தொழிலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அதன் தாக்கம் இன்னமும் தொடர்கிறது. 10 மற்றும் அதற்கு மேற்பட்ட மாடிகளுடன் கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகள் வாங்க மக்கள் தயக்கம் காட்டுவதே இதற்கு காரணம்.

ஏற்கனவே கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வால் பாதிப்பை எதிர்கொண்டு வரும் கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள், மவுலிவாக்கம் சம்பவத்தால் கட்டி முடித்த வீடுகளையும் விற்க முடியாமல் திணறுகிறார்கள். இதுகுறித்து சென்னை கட்டுமானப் பொறியாளர்கள் சங்க நிறுவனத் தலைவர் கோ.வெங்கடாசலம் “தி இந்து” நிருபரிடம் கூறியதாவது:-

மவுலிவாக்கம் சம்பவத்துக்குப் பிறகு, பாதுகாப்பு காரணமாக பெரிய அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகள் வாங்க மக்கள் தயக்கம் காட்டுகின்றனர். இதனால் போரூர், பழைய மகாபலிபுரம் ரோடு, ஜி.எஸ்.டி. சாலையில் கட்டப்பட்டுள்ள பன்னடுக்கு குடியிருப்புகளில் சுமார் 30 ஆயிரம் வீடுகள் விற்கப்படாமல் உள்ளன. இந்நிலையைப் போக்க வேண்டுமானால், 10 மற்றும் அதற்கு மேற்பட்ட மாடிகளுடன் குடியிருப்புகள் கட்டுவோர் கட்டிடத்தின் தரம் மற்றும் பாதுகாப்பு பற்றி உறுதி அளித்து, மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டும்.

பன்னடுக்கு குடியிருப்பு கட்டுவோரிடம் பொறியியல் ஆலோசகர் 62 விதமான விவரங்களைச் சேகரித்து அறிக்கை அளிப்பார். இதில், கட்டுனரின் தொழில் அனுபவம், மண் பரிசோதனை அறிக்கை, கட்டிட அமைப்பு வரைபடம், கட்டிட வரைபடம், பிளம்பிங் மற்றும் எலக்ட்ரிக்கல் வரைபடம், கட்டிட அனுமதி வரைபடம் ஆகியவை முக்கியமானதாகும். எனவே, பொறியியல் ஆலோசகர் மூலம் வீடு வாங்கினால், தரமான, பாதுகாப்பான வீடு வாங்க முடியும் என்று பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியம்’’ என்றார் வெங்கடாசலம்.

SCROLL FOR NEXT