புதுச்சேரியில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கும், அமைச்சரவைக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. அமைச்சர்களின் அதிகாரம் இன்றி எந்த கோப்புகளையும் ஆளுநருக்கு அனுப்பக் கூடாது என முதல்வர் நாராயணசாமி, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரி தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டத்தை முதல்வர் நாராயணசாமி நேற்று கூட்டினார். இதில் அமைச்சர்கள், காவல்துறை தலைவர் சுனில்குமார் கவுதம் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் முதல்வர் தெரிவித்தது தொடர்பாக அதிகாரிகள் கூறும்போது, “வாட்ஸ் அப், ஃபேஸ்புக், போன்றவற்றின் மூலம் ஆளுநர் கொடுக்கும் அறிவுறுத்தலை அரசு உத்தரவாக அதிகாரிகள் ஏற்கக் கூடாது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் மற்றும் அமைச்சர்களின் உத்தரவை துரிதமாக பின்பற்ற வேண்டியது அதிகாரிகளின் கடமை. அமைச்சர்களின் அதிகாரம் இன்றி எந்த கோப்புகளையும் ஆளுநருக்கு அனுப்பக் கூடாது” என்று தெரிவித்ததாகக் குறிப்பிட்டனர்.
இதன் மூலம் துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கும், முதல்வர் நாராயணசாமி மற்றும் அமைச்சரவைக்கும் இடையில் பனிப்போராக இருந்த மோதல் வெளிப்படத் தொடங்கி உள்ளது. அண்மையில் அமைச்சர்களின் ஒப்புதல் இன்றி ஆளுநருக்கு அதிகாரிகள் கோப்புகளை அளித்துள்ளதுதான் இதற்கு முக்கியக் காரணம் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கூட்டத்துக்கு பிறகு முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறும்போது, “ஆட்சிக்கு வந்த 45 நாட்களில் பல்வேறு துறைகளில் ஆய்வு செய்தபோது அதிகாரிகள் சரிவர பணிக்கு வரவில்லை என கண்டறியப்பட்டது. புதுச்சேரியை பொறுத்தவரை சட்டம், ஒழுங்கு, நிலம், அரசு ஊழியர் போன்றவற்றில் முடிவு எடுக்க அமைச்சரவைக்கு முழு அதிகாரம் உள்ளது. அமைச்சர்களின் முடிவை துணை நிலை ஆளுநர் ஏற்க வேண்டும். விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு ஆளுநர் செயல்பட வேண்டும் இது புதுச்சேரிக்கான 1,963 யூனியன் பிரதேச சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது என்பதை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளேன்” என்றார்.
கூட்டத்தில், அரசு ஊழியர்களின் வருகையை உறுதி செய்ய ‘பயோமெட்ரிக்’ முறையை அமல்படுத்துவது, கோப்புகளுக்கு காலக்கெடு நிர்ணயிப்பது உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.