ரஜ்மான் திருநாளையொட்டி தமிழக ஆளுநர் கே.ரோசய்யா, முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் இஸ்லாமிய மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
ஆளுநர் கே.ரோசய்யா:
இந்த புனித ரமலான் பண்டிகை காலத்தில், தமிழகம், ஆந்திரா, தெலங்கானா மற்றும் நாடு முழுவதும் உள்ள முஸ்லிம் சகோதரர்களுக்கு எனது ரமலான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
நம்பிக்கை, தொழுகை, தொண்டு மற்றும் நல்ல செயல்களை புனித நூலான குரான் வலியுறுத்துகிறது. இதை பின்பற்றி, சகோதரத்துவம், ஒற்றுமை, அமைதி, அன்பு மற்றும் இரக்கத்துடன் அனைவரும் இணைந்து மகிழ்ச்சியான உலகை படைப்போம்.
முதல்வர் ஜெயலலிதா:
இஸ்லாமிய பெருமக்கள் இப்புனித ரமலான் மாதத்தின் 30 நாட்களும் பகலில் உண்ணாமலும், பருகாமலும் நோன்பிருந்து உடலையும் உள்ளத்தையும் தூய்மைப்படுத்தி அனைவரிடத்தும் அன்பு பாராட்டி, ஏழை ஏளியோருக்கு உணவளித்து, பள்ளி வாசல்களில் நடக்கும் சிறப்பு தொழுகைகளில் பங்கேற்று இறைவனை வழிபட்டு, உற்றார் உறவினர்களுடன் கூடி மகிழ்ந்து ரமலான் பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்வர்.
இஸ்லாமிய மக்களின் நலனில் அக்கறை கொண்ட இந்த அரசு, ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க தமிழகம் முழுவதும் உள்ள 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளி வாசல்களுக்கு அரிசி வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவுக்கு வழங்கப்பட்டு வரும் நிர்வாக மானியம் ரூ.30 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. வக்பு வாரியத்துக்கு வழங்கப்படும் ஆண்டு நிர்வாக மானியம் ரூ.ஒரு கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இது போல் ஆதரவற்ற முஸ்லிம் பெண்களுக்கு உதவும் சங்கங்களுக்கு அரசால் வழங்கப்படும் இணை மானியம் 1:2 என்ற விகிதத்தில் மாற்றப்பட்டுள்ளது. நாகூர் சந்தனக் கூடுவிழாவுக்கு சந்தனக்கட்டை வழங்கப்படுகிறது.
இந்த இனிய நாளில் உலகெங்கும் அன்பும், அமைதியும் தழைக்கட்டும். நலமும் வளமும் பெருகட்டும் என இறைவனை வேண்டி, இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை ரமலான் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு தன் வாழ்த்துச் செய்தியில் ஆளுநர் ரோசய்யாவும், முதல்வர் ஜெயலலிதாவும் தெரிவித்துள்ளனர்.