வேந்தர் மூவீஸ் மதனை 2 வாரத்தில் கண்டுபிடித்து ஆஜர்படுத்தவும், அவர் மீது சுமத்தப்பட்டுள்ள பண மோசடி குறித்து நேர்மையாக விசாரணை நடத்தவும் மத்திய குற்றப்பிரிவு கூடுதல் துணை ஆணையர் எஸ்.ராதாகிருஷ்ணனுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வேந்தர் மூவீஸ் நிர்வாகியான மதன் கடந்த மே 27-ம் தேதி டெல்லி சென்றார். பின்னர் குடும்பத்தினருக்கு அனுப்பிய வாட்ஸ் அப் தகவலில் எஸ்ஆர்எம் பல்கலைக்கழக வேந்தருடன் ஏற்பட்ட பணப் பிரச்சினையால் கங்கையில் சமாதி அடையப்போவதாக கூறியிருந்தார். இந்நிலையில் மருத்துவ சீட்டு வாங்கித் தருவதாக கூறி கோடிக்கணக்கில் பண மோசடியில் ஈடுபட்டதாக மதன் மீது பாதிக் கப்பட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் போலீஸில் புகார் அளித்தனர். மதனை கண்டுபிடித்துத் தருமாறு கூறி அவரது 2 மனைவிகளும் புகார் அளித்தனர்.
இந்நிலையில் தனது மகனை கண்டுபிடித்து ஆஜர்படுத்த கோரி மதனின் தாயார் ஆர்.எஸ்.தங்கம், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, வி.பாரதிதாசன் ஆகியோர் முன்பு நேற்று நடந்தது. அப்போது மதனை நெருங்கிவிட்டதாகவும், இன்னும் ஓரிரு நாட்களில் அவரைக் கண்டுபிடித்து ஆஜர்படுத்துவதாகவும் அதற்கு காலஅவகாசம் தர வேண்டும் எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அப்போது நீதிபதிகள், ‘‘மாயமான மதனை கண்டுபிடித்து மீட்பது முக்கிய பணி. அதுபோல, மதனால் பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் குறித்தும், பண மோசடி குறித்தும் உரிய விசாரணை நடத்த வேண்டியது அதைவிட முக்கியமான பணி. இந்த 2 வழக்குகளையும் ஒருங்கே ஒரு நேர்மையான அதிகாரி விசாரணை செய்தால்தான் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி தீர்வு கிடைக்கும். எனவே இந்த வழக்கில் ஒரு நடுநிலையான அதிகாரியை காவல்துறை ஆணையர் நியமிக்க வேண்டும். இல்லாவிட்டால் நாங்களே, சமீபத்தில் சிலை கடத்தல் வழக்கை விசாரித்த அதிகாரி பொன்.மாணிக்கவேலை நியமிப்போம். இது தொடர்பாக டிஜிபி அல்லது ஆணை யரின் கருத்தை கேட்டு தெரிவியுங்கள்” என அரசு வழக்கறிஞரிடம் கூறினர்.
மாலை 4 மணிக்கு இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கில் மத்திய குற்றப்பிரிவு கூடுதல் துணை ஆணையர் எஸ்.ராதா கிருஷ்ணனை விசாரணை அதிகாரியாக நியமித்துள்ளதாக போலீஸ் ஆணையர் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், விசாரணை அதிகாரி 2 வாரத்துக்குள் மதனை கண்டுபிடிக்க வேண்டும் என்றும், பண மோசடி தொடர்பாக தனது அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 23-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.