தேன்கனிக்கோட்டை அருகே 15 அடி பள்ளத்தில் விழுந்த குட்டி யானையை வனத்துறையினர் கயிறு கட்டி மீட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம் உலிபண்டா காப்புக்காடு பகுதியில் நேற்று காலை சில யானைகள் தண்ணீருக்காக சுற்றித் திரிந்தன. அப்போது, அந்த பகுதியில் உள்ள 15 அடி ஆழ பள்ளத்தில் 5 மாத பெண் யானைக் குட்டி தவறி விழுந்தது.
தாய் யானை மற்றும் சில யானைகள் பள்ளத்தில் விழுந்த குட்டி யானையை மீட்க முயன்றன. குட்டி யானையை மீட்க முடியாத நிலையில், யானைகள் காட்டுக்குள் சென்றன. இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட வன அலுவலர் ராஜேந்திரன் மற்றும் தளி வனச்சரகர் முருகேஷ், செல்வராஜ், உதவியாளர் நாராயணன், வனக்காவலர் மல்லேஷ் மற்றும் வேட்டைத் தடுப்பு குழுவினர் அங்கு சென்றனர்.
பள்ளத்தின் ஓரமாக கற்களைக் குவித்து, குட்டி யானை மேலே வருவதற்கான வழியை ஏற்படுத்தினர். நீண்ட போராட்டத்துக்கு பிறகு யானையின் தும்பிக்கையை பிடித்து, பின்புறமாக கயிறு கட்டி மேலே தூக்கினர். 2 மணி நேரத்துக்கு பிறகு குட்டி யானை மேலே வந்தது. பள்ளத்தில் இருந்து மேலே வந்ததும் குட்டி யானை, தனது தாய் யானையை தேடி காட்டுக்குள் வேகமாக ஓடியது.
வறட்சியால் விலங்குகள் தண்ணீர் தேடி அலைவதைத் தடுக்க வனத்தில் உள்ள குளங்களில் டிராக்டர் மூலம் தண்ணீர் நிரப்ப வேண்டும் என வனவிலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.