பாலாற்றின் குறுக்கே உள்ள தடுப்பணை யின் உயரத்தை ஆந்திர அரசு உயர்த்தி யது தொடர்பாக சட்டப் பேரவையில் அமைச்சர்களுடன் திமுக உறுப்பினர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இப்பிரச்சினை தொடர்பாக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கைவிடுத்தார்.
சட்டப்பேரவை நேற்று காலை 10 மணிக்கு தொடங்கியதும் முன்னாள் உறுப்பினர்கள் 5 பேரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
மாநிலங்களுக்கு இடையே பாயும் முக்கிய நதிகளில் ஒன்றான பாலாறு 93 கி.மீ. கர்நாடகத்திலும், 33 கி.மீ. ஆந்திரத்திலும், 225 கி.மீ. தமிழகத்தி லும் பாய்கிறது. எனவே, பாலாற்று நீரில் தமிழகத்துக்கு அதிக உரிமை உள்ளது.
வேலூர், திருவண்ணாமலை, காஞ்சி புரம் மாவட்டங்களில் சுமார் 4 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாயம் பாலாற்று நீரை நம்பியுள்ளது. சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமா கவும் பாலாறு உள்ளது. கல்பாக்கத்தில் உள்ள அணுமின் நிலையம் பாலாற்று நீரை நம்பியே உள்ளது.
1892-ம் ஆண்டு ஏற்பட்ட மெட்ராஸ் - மைசூர் ஒப்பந்தப்படி தமிழகத்தின் அனுமதி இல்லாமல் பாலாற்று நீரை திசை மாற்றவோ, தேக்கவோ கூடாது. ஆனால், இதனை மீறி பல்வேறு தடுப்பணை களை ஆந்திரம் கட்டியுள்ளது. இதனை எதிர்த்து கடந்த 10-2-2006-ல் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந் துள்ளது. அந்த வழக்கு விவரங்களுக்குள் நான் செல்ல விரும்பவில்லை. தற்போது தடுப் பணையின் உயரத்தை ஆந்திர அரசு உயர்த்தி வருகிறது. இதனால் தமிழ கத்துக்கு தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அப்போது பேரவை முன்னவரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் குறுக்கிட்டு பேச முயன்றார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக உறுப்பினர்கள்,ஸ் டாலின் முழுமை யாக பேசி முடித்த பிறகு அமைச்சர் பதில் அளிக்கட்டும் எனக் கூறி கோஷமிட்டனர்.
அதனை ஏற்காத பேரவைத் தலைவர் பி.தனபால், நிதி அமைச்சரை பேச அழைத்தார். அவரை பேச விடாமல் திமுக உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று கோஷமிட்டனர். இந்த கூச்சல், குழப்பம் சுமார் 25 நிமிடங்கள் நீடித்தது.
அவர்களை எச்சரித்த பேரவைத் தலைவர், ‘‘ஒரு உறுப்பினர் பேசிக் கொண்டிருக்கும்போது பேரவை முன்னவர் குறுக்கிட்டால் பேச அனுமதிக்க வேண்டும் என்பது விதியாகும். எனவே, அவர் பேசி முடித்ததும் எதிர்க்கட்சித் தலைவருக்கு வாய்ப்பு தருகிறேன். பேரவையை எப்படி நடத்துவது என என்னை யாரும் நிர்ப்பந்திக்க முடியாது’’ என்றார்.
அதனைத் தொடர்ந்து பேசிய ஒ.பன்னீர் செல்வம், ‘‘பாலாறு பிரச்சினை நீதி மன்றத்தில் உள்ளது. எனவே அதுபற்றி இங்கே விவாதிப்பது சரியல்ல. பேரவைத் தலைவர் பேச வாய்ப்பு தருகிறேன் என பலமுறை கூறிய பிறகும் திமுக உறுப் பினர்கள் அவையை நடத்த விடாமல் கூச்சலிடுவது சரியல்ல’’ என்றார்.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற விவாதம்:
ஸ்டாலின்:
தமிழக இந்து சமய அற நிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கனகநாச்சியம்மன் கோயிலை ஆந்திர மாநிலம் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. இது பற்றியும் தடுப்பணையின் உயரத்தை ஆந்திர அரசு உயர்த்தி வருவது குறித்து அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி விவாதித்து சுமுகத் தீர்வு காண வேண்டும். இது குறித்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
பொதுப்பணித் துறை அமைச்சர் எடப் பாடி பழனிச்சாமி:
பாலாற்றின் குறுக்கே உள்ள தடுப்பணையின் உயரம் அதிகரிக் கப்பட்டுள்ள தகவல் அறிந்ததும் ஆந்திர முதல்வருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதினார். இது தொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மூலம் ஆந்திரம் மற்றும் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரை முருகன்:
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தமிழகத்தோடு நல்ல நட்பில் இருப் பவர். அவரது தொகுதியான குப்பம் தமிழக எல்லையில் உள்ளது. அங்கு அதிகமான தமிழர்கள் வசிக்கின்றனர். அவரை நேரில் சந்தித்து நிலைமையை விளக்கினால் புரிந்துகொள்வார். எனவே, பொதுப்பணித் துறை அமைச்சர் தலை மையில் அனைத்துக் கட்சி குழுவினர் ஆந்திர முதல்வரை சந்திக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி:
பாலாற்றில் தடுப்பணைகள் கட்டுவதை எதிர்த்து கடந்த 10-2-2006 அதிமுக ஆட்சியில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதன்பிறகு 2006 முதல் 2011 வரை ஆட்சியில் இருந்த திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால் இப்பிரச்சினை இன்றும் தொடர்கிறது.
துரைமுருகன்:
திமுக ஆட்சியில் தடுப் பணைகள் கட்டப்படவில்லை. இப்போ துதான் கட்டுகிறார்கள். எனவேதான் ஆந்திர முதல்வரை சந்திக்க வேண்டும் என்கிறோம்.
இவ்வாறு விவாதம் நடைபெற்றது.