அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை முன்பு, விதிகளை மீறி வைக்கப்பட்டிருந்த பேனரை அகற்றக்கோரி டிராபிக் ராமசாமி நேற்று போராட்டம் நடத்தினார்.
சென்னை அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையில் மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. அதற்காக அம்மருத்துவமனை நுழைவுவாயில் முன்பு முதல்வர் ஜெய லலிதாவின் படம் இடம்பெற்ற பேனர் வைக்கப்பட்டுள்ளது.
இரு தினங்களுக்கு முன்பு, விளம்பர பேனர் (பலகைகள் மற்றும் பதாகைகள்) கண்காணிப்புக் குழு தலைவர், உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.ராஜேஸ்வரன், உறுப்பி னர்கள் பி.ஏகாம்பரம், ஏ.எஸ்.ஜீவரத்தினம் ஆகியோர் தலைமை யில், மாநகராட்சி ஆணையர் தா.கார்த்தி கேயன் முன்னிலையில் கூட்டம் நடை பெற்றது. அதில் அனுமதியின்றி வைக் கப்பட்ட பேனர்களை அகற்ற அறிவுறுத்தப் பட்டிருந்தது.
இந்நிலையில் அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை முன்பு வைக்கப்பட்டிருந்த பேனர், விதிகளை மீறி வைக்கப்பட்டுள்ளதாகவும், அதை அகற்ற வேண்டும் என்றும் கூறி, பேனர் முன்பு, சாலையில் படுத்தவாறு டிராபிக் ராமசாமி நேற்று போராட்டம் நடத்தினார். அவரிடம் மாநகர காவல்துறை உதவி ஆணையர் எஸ்.முத்துவேல் பாண்டி பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் அவரது கோரிக்கையை ஏற்று, மாநக ராட்சி பணியாளர்கள் பேனர்களை அகற்றினர்.
இது தொடர்பாக டிராபிக் ராமசாமி கூறும்போது, “உரிய அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், இந்த பேனரை மாநகராட்சியும், காவல்துறையும் அகற் றாமல் உள்ளன. இதை அகற்றக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டேன். இந்த பேனர் வைக்க மாநகராட்சி சார்பில் முறையான அனுமதி வழங்கப்பட்டிருந்தால், அதற் கான ஆவணங்களை காட்டுமாறு கூறினேன். அவர்களிடம் அனுமதி கடிதம் இல்லாததால், உடனே பேனரை அகற்றிவிட்டனர். இந்த விவரங்களை நாளை (வெள்ளிக்கிழமை) உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் பேனர் தொடர்பான வழக்கில் தெரிவிக்க இருக்கிறேன்” என்றார்.
சிஎஸ்ஆர் பதிவு
இந்நிலையில், போக்குவரத்துக்கு இடையூறு செய்தார் என்று டிராபிக் ராமசாமி மீது, அகிலா(62) என்ற சமூகசேவகி திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் சிஎஸ்ஆர் பதிவு செய்யப் பட்டுள்ளது.