பெரம்பூரில் ரூ.1 கோடி கேட்டு தொழில் அதிபரை கடத்திய 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலை பிரகாஷ் நிழற்சாலையில் வசிப்பவர் கணேசன். ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கணேசன் வீட்டில் இருந்து காரில் வெளியே சென்றபோது மர்ம கும்பல் அவரை காருடன் கடத்திச் சென்றுவிட்டனர். பின்னர் கணேசனிடம் ரூ.1 கோடி கேட்டு மிரட்டினர். அவ்வளவு பணம் இல்லை என்று அவர் கூறினார். இதையடுத்து, ‘ரூ.10 லட்சத்தை ஒரு வாரத்தில் கொடுக்க வேண்டும். போலீஸில் புகார் செய்தால் கொலை செய்துவிடுவோம்’ எனக்கூறி அவரை விடுவித்துள்ளனர். ஆனால் கணேசனிடம் இருந்து கார், ரூ.10 ஆயிரம் பணம் மற்றும் செல்போனை பறித்துச் சென்றனர்.
இதுகுறித்து கணேசன் செம்பியம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். உதவி ஆணையர் ஜான் ஜோசப், ஆய்வாளர் சக்திவேல் ஆகியோர் கடத்தல் கும்பல் குறித்து நடத்திய விசாரணையில் கே.கே.நகர், எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் பதுங்கி இருப்பது தெரிந்தது. தனிப்படை போலீஸார் அங்கு விரைந்து சென்று கே.கே.நகரை சேர்ந்த முத்துப்பாண்டி, திருவொற்றியூரை சேர்ந்த பூமிநாதன் ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 2 பேர் தலைமறைவாகிவிட்டனர். அவர்களை பிடிக்கும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
கைதானவர்களிடம் இருந்து கார், ரூ.10 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டன. கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் கணேசனிடமிருந்து பறித்த செல்போனை பயன்படுத்தி வந்து உள்ளனர். இதனை வைத்து போலீஸார் அவர்களை பிடித்து விட்டனர்.