தமிழகம்

ரயில்வேயை தனியார் மயமாக்கினால் இளைஞர்களின் வேலைவாய்ப்பு பறிபோகும்: எஸ்.ஆர்.எம்.யூ. பொதுச் செயலாளர் கவலை

செய்திப்பிரிவு

ரயில்வேயை தனியார் மயமாக் கினால் ஏராளமான இளைஞர்களின் வேலைவாய்ப்பு பறிபோகும் என சதர்ன் ரயில்வே மஸ்தூர் யூனியன் (எஸ்ஆர்எம்யு) பொதுச் செயலர் என். கண்ணையா தெரிவித்தார்.

மதுரையில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: ரயில்வே துறையில் தற்போது 4 லட்சம் காலிப் பணியிடங்கள் உள்ளன. தனியா ர்மயத்தை அனுமதித்தால், இளை ஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்காது. தனியார்மயத்தால் ரயில் கட்டணம் 4 மடங்கு உயர்ந்து விலைவாசி உயரும். இதனால் அனைவரும் கடுமையாக பாதிக்கப்படுவர். ரயில்வே துறையில் தனியார் மயத்தை அனுமதிக்கக் கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி, அதிகாரிகளிடம் ஐந்து முறை பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை.

தொழிற்சங்கங்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகளை பரிசீலி த்தால் ரயில்வே துறை லாபத்தில் இயங்கும். 1971-ம் ஆண்டுக்கு பிறகு ரயில்வே ஊழியர்கள் பங்குபெறும் பெரிய போராட்டமாக ஜூலை 11-ம் தேதி நடைபெற உள்ள காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் இருக்கும். குறைந் தபட்ச ஊதியமாக ரூ. 26 ஆயிரம் நிர்ணயிக்கப்பட வேண்டும், புதிய ஓய்வூதியத் திட்டம், 7-வது ஊதியக் குழுவின் தொழிலாளர் விரோதப் போக்கை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 36 கோரிக்கைகளை முன்வைத்து ஜூலை 11-ம் தேதி முதல் நாடு முழுவதும் ரயில்வே தொழிலா ளர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற உள்ளது.

இந்தப் போராட்டத்துக்கு உத்தரப்பிரதேசம், மேற்குவங்கம், பிகார், புதுடெல்லி அரசுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. அதேபோல தமிழகம், கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட மாநில அரசுகளிடமும் ஆதரவு கோர உள்ளோம் என்றார்.

SCROLL FOR NEXT