தீவிரவாதி போலீஸ் பக்ருதீனை பிடிப்பதற்கு உதவிகரமாக இருந்த 238 போலீசாருக்கு ரூ.2 கோடியே 53 லட்சம் பரிசுத் தொகையை முதலமைச்சர் ஜெயலலிதா வழங்கினார்.
இது குறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
இந்து முன்னணி பிரமுகர் வெள்ளையப்பன், பாரதிய ஜனதா கட்சியின் மாநிலச் செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் ஆகியோர் கொலை வழக்குகளில் புலன் விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடிக்க ஏதுவாக குற்றப் பிரிவு குற்றப் புலனாய்வுத் துறை தலைமை இயக்குநர் நரேந்திரபால் சிங், தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.
இந்த கொலை வழக்குகளில் தொடர்புடைய தலைமறைவு எதிரிகளான போலீஸ் பக்ருதீன் 4.10.2013 அன்றும், பிலால் மாலிக் மற்றும் பன்னா இஸ்மாயில் ஆகியோர் ஆந்திர மாநிலம், புத்தூரில் தனிப் படையினரின் தீவிர முயற்சியின் பலனாக 5.10.2013 அன்றும் கைது செய்யப்பட்டனர்.
மேற்படி தலைமறைவு எதிரிகளை கைது செய்வதற்காக தங்களது உயிரைப் பணயம் வைத்து, மிகுந்த கடமை உணர்வுடனும், துணிச்சலுடனும் போராடி பணியாற்றிய சிறப்பு குழுவைச் சேர்ந்த 22 காவல் துறையினருக்கு கடந்த 9.10.2013 அன்று முதலமைச்சர் ஜெயலலிதா பரிசுத் தொகைக்கான காசோலைகளையும், 20 காவல் துறையினருக்கு ஒருபடி பதவி உயர்வையும் வழங்கி பாராட்டினார்.
மேலும், இது போன்ற குற்றவாளிகளைப் பிடிப்பதில் கூட்டு முயற்சி மற்றும் ஒருங்கிணைந்த செயல்பாடு ஆகியவை மிகவும் இன்றியமையாதவை ஆகும். இதனைக் கருத்தில் கொண்டு இவ்வழக்கு தொடர்பான பல்வேறு நிகழ்வுகளில் சிறப்பாகப் பணியாற்றி நுண்ணறிவு தகவல்கள் அளித்து, கடமை உணர்வுடன் செவ்வனே பணியாற்றிய காவல் துறையினருக்கும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா 14.10.2013 அன்று அறிவித்ந்தார்.
அதன்படி, தலைமறைவு எதிரிகளான போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக் மற்றும் பன்னா இஸ்மாயில் ஆகியோர் கைது செய்யப்பட காரணமாக அமைந்த 238 காவல் துறையினருக்கு 2 கோடியே 53 லட்சம் ரூபாய் பரிசுத் தொகைக்கான காசோலைகளை முதலமைச்சர் ஜெயலலிதா இன்று வழங்கி அவர்களின் சிறப்பான செயல்பாட்டினைப் பாராட்டினார்.
இந்த நிகழ்ச்சியினைத் தொடர்ந்து, முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் பரிசுத் தொகையை பெற்றுக் கொண்ட 238 காவல் துறையினர், முதலமைச்சருடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
அப்போது, முதலமைச்சர் ஜெயலலிதா பரிசுத் தொகைக்கான காசோலைகளை பெற்றுக் கொண்ட காவல்துறையினரிடம், அனைவருக்கும் எனது பாராட்டுதல்களையும், உங்கள் பணி மென்மேலும் சிறக்க எனது நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்தார் என்று அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.