நெய்வேலி, கல்பாக்கம் உள்ளிட்ட மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களுக்கு சொந்தமான 10 மின் அலகுகளில் தொடர்ந்து உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்துக்கு சேர வேண்டிய ஒதுக்கீட்டில், 500 மெகாவாட் குறைவாகவே, மத்திய நிலையங்களிலிருந்து தமிழகத்திற்கு கிடைத்ததால், எட்டு மணி நேர மின்வெட்டு, வெள்ளிக்கிழமையும் அமலானது. தட்டுப்பாட்டை போக்க சென்னையிலும் 2ம் தேதி முதல் இரண்டு மணி நேர மின்வெட்டு அமலுக்கு வருகிறது.
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவன மின் நிலையங்கள் ஒட்டு மொத்தமாக மின் உற்பத்தியை பெருமளவு குறைத்ததால், தமிழகத்தில் மின்வெட்டை அமல்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டதாக, இரு தினங்களுக்கு முன் வெளியிட்ட அறிக்கையில் முதல்வர் ஜெயலலிதா கூறியிருந்தார்.
இந்நிலையில், வெள்ளிக் கிழமை நிலவரப்படி, மத்திய அரசின் தேசிய அனல்மின் கழக கட்டுப்பாட்டிலுள்ள தலா 500 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு அலகுகளில், முதல் அலகில், நேற்று காலை 3.13 மணிக்கு மின் உற்பத்தி துவங்கியது.
இதேபோல், பெல் நிறுவன கட்டுப்பாட்டிலுள்ள வடசென்னை புதிய அனல்மின் நிலையத்தில், 600 மெகாவாட் திறனுள்ள இரண்டாம் அலகிலும் வெள்ளிக்கிழமை மின் உற்பத்தி துவங்கியது.
அதேநேரம், மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள நெய்வேலி மின் நிலையத்தின் நான்கு அலகுகள், வள்ளூர் நிலையத்தின் இரண்டாம் அலகு, கல்பாக்கம் அணு மின் நிலையம், ஆந்திராவிலுள்ள சிம்மாத்ரி நிலையம் ஆகியவற்றிலுள்ள 10 மின் நிலையங்களிலும், தமிழகத்திற்கு சொந்தமான தூத்துக்குடி அனல் மின் நிலையத்தின், 210 மெகாவாட் திறனுள்ள ஒரு அலகிலும் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு, பழுது பார்ப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் நடக்கின்றன.
இது குறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், “மத்திய மின் நிலையங்கள் ஒட்டு மொத்தமாக மின் உற்பத்தியை நிறுத்தி விட்டதால், தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. காற்றாலை சீசன் முடிந்து, 3,000 மெகாவாட் உற்பத்தி ஏற்கெனவே
குறைந்தது. இந்நிலையில் மத்திய மின் நிலையங்கள் திடீரென மின் உற்பத்தியை நிறுத்திக் கொண்டதால், மின் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது” என்றனர்.
வெள்ளிக்கிழமை நிலவரப்படி, மத்திய அரசின் 3,520 மெகாவாட் பங்கில், 3,000 மெகாவாட் மட்டுமே, தமிழகத்திற்கு கிடைத்தது. அதேநேரம், கூடங்குளம் அணு மின் நிலையத்தில், நேற்று காலை வரையுள்ள 24 மணி நேரத்தில், 70 லட்சம் யூனிட் மின்சாரம் தமிழக மின்வாரியத்திற்கு கிடைத்தது. காற்றாலையிலிருந்து, காலை ஏழு மணியளவில் 11 மெகாவாட் உற்பத்தியானது.