ஆர்.கே.நகர் தேர்தல் முடியும் வரை அந்நிய செலாவணி வழக்குகள் மீதான விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என டிடிவி.தினகரன் விடுத்த கோரிக்கையை நிராகரித்த எழும்பூர் நீதிமன்றம், இன்றுமுதல் தினந்தோறும் என்ற அடிப்படையில் இந்த வழக்குகள் விசாரிக்கப்படும் என உத்தரவிட்டுள்ளது.
டிடிவி.தினகரன் மீது 2 அந்நிய செலாவணி மோசடி வழக்குகள் சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகள் மீதான விசாரணை நீதிபதி மலர்மதி முன்பு நேற்று நடந்தது.அப்போது, ‘‘ஆர்.கே.நகர் தொகுதியில் டிடிவி.தினகரன் போட்டியிடுவதால், தேர்தல் முடி யும் வரை இந்த விசாரணையை தள்ளி வைக்க வேண்டும்’’ என கோரி ஒரு மனு தாக்கல் செய்யப் பட்டது.
அப்போது இதற்கு ஆட்சேபம் தெரிவித்து மத்திய அமலாக் கத்துறை தாக்கல் செய்த மனுவில், ‘‘இந்த வழக்குகள் மீதான விசா ரணை கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருந்து வருகிறது. ஆர்.கே.நகர் தேர்தலுக் கும், இந்த வழக்குகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தற் போதும் இந்த வழக்குகளின் விசாரணையை இழுத்தடிக்க வேண்டுமென்பதற்காகவே இந்த மனுவை டிடிவி.தினகரன் தரப்பு தாக்கல் செய்துள்ளது.
எனவே, இந்த கோரிக்கையை நிராகரித்து, இந்த வழக்கு விசா ரணையை தினந்தோறும் என்ற அடிப்படையில் வேகமாக நடத்தி முடிக்க வேண்டும்’’ என அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி மலர்மதி, ‘‘ஆர்.கே.நகர் தேர்தல் முடியும் வரை இந்த வழக்குகளின் விசாரணையை தள்ளிப்போட முடியாது’’ எனக்கூறி டிடிவி. தின கரன் தரப்பு விடுத்த கோரிக் கையை ஏற்க மறுத்தார். மேலும், அமலாக்கத்துறை தரப்பில் விடுத்த கோரிக்கையை ஏற்று விசாரணை இன்று முதல் தினந்தோறும் என்ற அடிப்படையில் விசாரிக்கப்படும் என உத்தரவிட்டார்.