ரூபாய் நோட்டு தட்டுப்பாட்டைக் கண்டித்து மேடவாக்கத்தில் போராட்டம் நடத்திய இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தினர் மீது போலீஸார் தடியடி நடத்தினர்.
பண மதிப்பு நீக்க நடவடிக் கையால் ரூபாய் நோட்டுகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதைக் கண்டித்து சென்னை மேடவாக்கத்தில் உள்ள ஏடிஎம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நேற்று தென் சென்னை மாவட்டத் தலைவர் கிருஷ்ணா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மத்திய அரசு, ரிசர்வ் வங்கி, பிரதமர் மோடிக்கு எதிராக அவர்கள் கோஷமிட்டனர். அப்போது, பிரதமர் மோடியின் உருவ பொம்மையை எரிக்க முயன்றனர். அதை போலீஸார் தடுக்க வந்தபோது, இருதரப்புக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பெண்களிடம் போலீ ஸார் அநாகரிகமாக நடந்துகொண்ட தாகக் கூறி சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். இதை யடுத்து, சுமார் 30 பேரை போலீ ஸார் கைது செய்தனர். இதனால் மேடவாக்கம் - வேளச்சேரி சாலை யில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட 30 பேரில் 14 பேரை மட்டும் போலீஸார் தனியாக அழைத்துச் சென்றனர். இதைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய மாணவர் சங்கம், ஆட்டோ ஓட்டுநர் சங்கம் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த சுமார் 200 பேர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர்.
இதுதொடர்பாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலத் தலைவர் எம்.செந்தில், மாநிலச் செயலாளர் எஸ்.பாலா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘மேடவாக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடத்திய பெண்கள் மீது போலீஸார் அநாகரிகமாக நடந்துகொண்டனர். இதைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத் தியுள்ளனர். பெண்களிடம் அநாகரி கமாக நடந்துகொண்ட போலீஸார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘‘ஏடிஎம் முன்பு அமைதியாக ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது பள்ளிக்கரணை போலீஸார் தடியடி நடத்தியது கண்டனத்துக்குரியது. பெண்களிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட போலீஸார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனே விடுதலை செய்ய வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.