மதுரை ரவுடி ‘டாக்’ ரவி சென்னை யில் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டார்.
மதுரையை சேர்ந்தவர் ரவிக்குமார்(39). வெளிநாட்டு நாய் களை வளர்த்து விற்பனை செய்வது மற்றும் அவற்றுக்கு பயிற்சி கொடுக்கும் தொழிலை ரவிக்குமார் செய்து வந்ததால் இவருக்கு ‘டாக்’ ரவி என்ற பெயர் வந்தது. 2004-ம் ஆண்டு ஆலடி அருணா கொலை வழக்கு, 2000-ம் ஆண்டில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த பிரபல ரவுடி வரிச்சூர் செல்வத்தின் தம்பி இளங்கோவை கொலை செய்தது, என இவர் மீது 4 கொலை வழக்குகள் உட்பட 25-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.
தன்னை கொலை செய்வதற் காக மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் பல ரவுடிகள் சுற்றுவதால், உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக சென்னையில் தலைமறைவு வாழ்க்கை நடத்தி வந்தார் ரவி. தனது பாதுகாப்புக்காக எப்போதும் ஒரு கை துப்பாக்கியையும் தன்னுடன் வைத்திருப்பார். இந்நிலையில் தேர்தலை முன்னிட்டு ரவுடிகளை கைது செய்யும் நடவடிக்கையில் காவல் துறையினர் தீவிரமாக இறங்கியுள்ளனர். காவல் துறையினர் நடத்திய விசாரணையில் ரவுடி ரவி, அம்பத்தூரில் பதுங்கி யிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, ரவுடிகள் கண்காணிப்பு பிரிவு ஆய்வாளர்கள் சிவராம்குமார், சபாபதி, ஸ்டீபன், உதவி ஆய்வாளர்கள் ஆனந்தகுமார், கமல், மோகன், காவலர் அருள் ஆகியோர் அம்பத்தூர் ராக்கி திரையரங்கம் அருகே வைத்து துப்பாக்கி முனையில் ரவியை ஒரு காரில் வைத்து மடக்கி பிடித்தனர்.
அவரிடம் இருந்து அமெரிக்க தயாரிப்பு கைத்துப்பாக்கி யையும், அவரது காரையும் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.