விசைத்தறியாளர்களுக்கு உரிய ஒப்பந்தக் கூலியை உடனடியாக வழங்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழகத்தில் கடந்த 6 மாத காலமாக கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் பல்வேறு கஷ்டங்களுக்கும், நெருக்கடிகளுக்கும் மத்தியில் தொழில் செய்து வருகிறார்கள்.
கோவை, திருப்பூர் மாவட்டத்தில் சுமார் 2 லட்சம் விசைத்தறிகள் உள்ளன. இதில் 95 சதவீத தறிகள் கூலி அடிப்படையில் இயங்கி வருகிறது. சுமார் 3 லட்சம் தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் விசைத்தறி தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். இத்தொழிலில் மந்த நிலை ஏற்பட்டதால் கடந்த 2014-ம் ஆண்டு ஒரு ஒப்பந்தம் போடப்பட்டு அதன் அடிப்படையில் விசைத்தறியாளர்களுக்கு குறைந்த பட்ச கூலியை வழங்க ஜவுளி உற்பத்தியாளர்கள் ஏற்றுக்கொண்டார்கள். ஆனால் ஒப்பந்தப்படி கூலியை வழங்கவில்லை.
ஒவ்வொரு விசைத்தறியாளரிடமிருந்தும் லட்சக்கணக்கான ரூபாய் பிடித்தம் செய்த நிலையில் 30 நாட்கள் வேலை நிறுத்தம் செய்தும், போராட்டங்கள் நடத்தியும் அதன் பலனாக கடந்த பிப்ரவரி மாதம் (22.02.2016) அன்று கோவை, திருப்பூர் மாவட்ட ஆட்சியர்கள், அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் மூலம் ஜவுளி உற்பத்தியாளர்கள் ஒப்பந்தபடி கூலியை வழங்குவது என்று உறுதியளித்தார்கள். ஆனால் அவர்கள் கூலியை குறைத்து வழங்கி வருகிறார்கள்.
மேலும் தொழில்துறை அதிகாரிகள், ஜவுளி உற்பத்தியாளர்கள் மத்தியில் நடைபெற்ற பலகட்டப் பேச்சு வார்த்தையிலும் தீர்வு காணப்படவில்லை. இதனால் விசைத்தறி உரிமையாளர்கள், தொழிலாளர்கள் தொழில் செய்ய முடியாமல் வருமானம் கிடைக்காத சூழலில் குடும்பத்தைக் காப்பாற்றி வருகிறார்கள். இது இவர்களுக்கு பெரும் கஷ்டத்தையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் விசைத்தறி உரிமையாளர்கள் ஒப்பந்த கூலியை முழுமையாக பெற்றால் மட்டுமே தொழில் செய்ய முடியும்.
ஏற்கெனவே போடப்பட்ட ஒப்பந்த காலம் முடிந்து புதிய ஒப்பந்தம் போடக்கூடிய நிலையில் தொடர்ந்து குறைந்த கூலி கிடைத்தால் தொழில் செய்யமுடியாமல், வாழ்வாதாரத்தை இழந்து நிற்க வேண்டிய சூழல் தான் ஏற்படும். எனவே இனிமேல் இது போன்ற சூழல் ஏற்படாமல் இருக்கவும், ஒப்பந்தப்படி உரிய கூலியைத் தவறாமல் தொடர்ந்து கொடுக்கவும் தகுந்த நடவடிக்கையை எடுக்க தமிழக அரசையும், தொழில் துறையையும் வலியுறுத்தி விசைத்தறி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
எனவே தமிழக அரசு - அரசு அதிகாரிகள், விசைத்தறி உரிமையாளர்கள், தொழிலாளர்கள், ஜவுளி உற்பத்தியாளர்கள் கொண்ட குழு அமைத்து பேச்சுவார்த்தை நடத்தி விசைத்தறியாளர்களிடம் இருந்து பிடித்துவைத்துள்ள லட்சக்கணக்கான ரூபாயை அவர்களுக்கு வழங்கி, ஒப்பந்தக் கூலியை ஒப்பந்த காலம் முடிவதற்குள்ளாக கொடுத்து, விசைத்தறி தொழிலையும், இதை நம்பி வாழும் லட்சக்கணக்கான விசைத்தறியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தையும் பாதுகாத்திட வேண்டும்'' என்று வாசன் கூறியுள்ளார்.