சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் ஒரு ரயில்வே முன்பதிவு மையம் செயல்பட்டாலும் கூட, தட்கல் டிக்கெட்டுகள் எடுக்க முடியாமல் உள்ளது.
உயர் நீதிமன்ற வளாகத்துக்கு வரும் வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்களின் நலன் கருதி கடந்த 8.9.2008 அன்று உயர் நீதிமன்ற வளாகத்தில் ரயில்வே முன்பதிவு மையம் தொடங்கப்பட்டது.
எனினும் இந்த முன்பதிவு மையத்தால் முழுமையான பயன்கள் கிடைக்கவில்லை.
பயண தேதிக்கு முந்தைய நாள் காலை 10 மணி முதல் தட்கல் டிக்கெட்டுகளை எடுக்கலாம். பெரும்பாலான ரயில்களில் முன்பதிவு தொடங்கிய ஒரு மணி நேரத்துக்குள்ளாகவே அனைத்து தட்கல் டிக்கெட்டுகளும் முடிந்து விடும் நிலையில், சென்னை உயர் நீதிமன்ற வளாக மையம் காலை 11 மணிக்குதான் திறக்கப்படுகிறது. சென்னை மாநகரின் பெரும் பாலான இடங்களில் உள்ள முன்பதிவு மையங்கள் காலை 8 மணி முதல் செயல்படுகின்றன. அதேபோல் இந்த மையத்தையும் காலை 10 மணிக்கு முன்பு திறந்தால் தட்கல் டிக்கெட் எடுப்போருக்கு பயனுள்ளதாக இருக்கும் என வழக்கறிஞர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இது குறித்து வழக்கறிஞர் எம்.பழனிமுத்து கூறியதாவது:
"ரயில் பயணத்தைப் பொருத்த மட்டில் தட்கல் டிக்கெட்டுகளை நம்பியே வழக்கறிஞர்கள் உள்ளனர்.
ஆகவே 10 மணிக்கு முன்பே முன்பதிவு மையத்தைத் திறக்க வேண்டும். அதேபோல் சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் குடும்ப நல நீதிமன்றங்கள் செயல்படு வதாலும், ஆயிரக்கணக்கான வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் வருவதாலும் அந்த நாட்களிலும் முன்பதிவு மையம் செயல்பட வேண்டும். இது தவிர தற்போது ஒரு கவுண்டர் மட்டுமே உள்ளதால் அதிக நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. எனவே, கவுண்டர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றார் பழனிமுத்து.