மின் தொகுப்புடன் இணையக் கூடிய மேற்கூரை சூரிய மின்சக்தி திட்டத்தில், தமிழக அரசின் 20 சதவீத மானியத்தை பெறுவதற்குரிய நிபந்தனைகளை தமிழ்நாடு எரிசக்தி முகமை அறிவித்துள்ளது. இதன்படி, வீட்டு உபயோக நுகர்வோருக்கு மட்டும் மானியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் சூரிய மின்சக்தி கொள்கைப்படி, வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி உபகரணங்கள் பொருத்துவதற்கு, ஒரு கிலோ வாட்டுக்கு 20 சதவீத மானியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. தற்போது மானியம் பெறுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும், நிபந்தனைகளையும் அறிவித்துள்ளது.
இதன்படி, வீட்டு உபயோக மின் கட்டணப் பட்டியலில் உள்ளவர்கள் மட்டும் மானியம் பெற தகுதி பெற்றவர்கள் ஆவர். விண்ணப்பித்த பின், முகவரி மாறினால் அந்த விண்ணப்பம் பரிசீலினைக்கு எடுத்துக் கொள்ளப்படாது என்றும், புதிய விண்ணப்பம் புதிய பதிவு மூப்பு பட்டியலில் சேர்க்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மின் தொகுப்புடன் கூடிய சூரிய மின் சக்தி பொருத்த நினைப்போர், தமிழ்நாடு எரிசக்தி முகமையான ’டெடா’வெளியிடும் சூரிய மின் சக்தி உபகரண நிறுவனங்களில் ஏதாவதொரு நிறுவனத்தின் மூலம் மட்டுமே, கருவிகளை பொருத்த வேண்டும். மத்திய அரசின் சார்பில் வழங்கப்படும், 30 சதவீத மானியத்தை, தனியாக மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணைய விதிகளின் படி, தனியாக விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம். அதற்கும் தமிழக மானியத்திற்கும் தொடர்பு கிடையாது.
கூட்டாக உள்ள அபார்ட்மெண்ட் குடியிருப்புகள், தங்களது பொதுவான நீச்சல்குளம், தண்ணீர் மோட்டார் பயன்பாடு மற்றும் லிப்டு வசதிகளுக்கான மின் இணைப்புக்கு மட்டுமே, மானியம் பெற முடியும். மேற்கூரை இல்லாவிட்டால், அபார்ட்மெண்ட்களின் மேல் மேற்கூரை போன்ற அமைப்பை ஏற்படுத்தி, சூரிய சக்தி உபகரணங்கள் பொருத்தலாம்.
அனைத்து விண்ணப்பங்களும் தபால் அல்லது ஆன் – லைனில் அனுப்ப வேண்டும். இதுகுறித்து கூடுதல் விவரங்களை டெடா இணையத் தளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.