மருத்துவத்துறையில் முக்கியத் துவம் வாய்ந்த ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தஞ்சா வூருக்கு கொண்டு செல்ல பெரும் முயற்சி எடுக்கும் நிலையில் அதற்கு மாவட்ட உள்ளூர் அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்து மதுரைக்கு வந்த இந்த திட்டத்தை பெற எந்த முயற்சியும் எடுக்காமல் இருப்பதாக பொதுமக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து இரண்டாவது மருத்துவ தலைநகராக மதுரை இருக்கிறது. தமிழகத்தில் 21 அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனைகள், 32 மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள், 240 தாலுகா மருத்துவமனைகள் உள்ளன. இதில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளை பொறுத்த வரையில் ஆண்டிற்கு 90 லட்சம் உள் நோயாளிகளும், 2 கோடியே 60 லட்சம் வெளி நோயாளிகளும் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளை காட்டிலும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அதிகளவு நோயாளிகள் வந்து செல்கின்றனர்.
இலங்கை, மலேசியா, கேரளா மற்றும் தென் மாவட்டங்களில் இருந்து இங்கு உயிர் காக்கும் உயர் சிகிச்சைகளுக்கு வருகின்றனர். அதனால், நோயாளிகள் வருகை அடிப்படையிலும், தென், வட மாவட்டங்களுக்கு மையப்புள்ளியாக இருக்கும் இடம் என்பதாலும், தோப்பூரில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை அமைக்க, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும், மத்திய அரசும் ஆர்வமாக இருந்தனர். அதற்காக, மதுரை தோப்பூரில் ஒதுக்கிய 200 ஏக்கர் நிலத்தை மத்திய சுகாதாரத்துறை குழு ஆய்வு செய்தது. அந்த குழுவுக்கு இந்த இடம் திருப்தியளித்ததால் மதுரையில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை அமையும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், தற்போது அதற்கு நேர்மாறாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மதுரைக்கு வந்த ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையை தஞ்சாவூரில் அமைக்க முயற்சிப்பதாக கூறப்படுகிறது. எனவே மதுரை மாவட்ட உள்ளூர் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூவும், ஆர்.பி.உதயகு மாரும், மதுரையில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை அமைய குரல் கொடுக்க வேண்டும் என மதுரை மாவட்ட மக்கள், தொழில் முனைவோர், தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைவரும் வலியுறுத் துகின்றனர்.
இதுகுறித்து மதுரையை சேர்ந்த அரசியல் பிரமுகர்கள் கூறியது;
அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் இரண்டாவது முறையாக தற்போது அமைச்சர்களாக உள்ளனர். இருவரும் போட்டிபோட்டு மதுரைக்கான திட்டங்களையும், தொழில் வாய்ப்புகளையும் கொண்டுவர முயற்சி எடுக்கவில்லை. மதுரை மட்டுமில்லாது தென் மாவட்டங்களில் பெரும் திட்டங்களை கேட்டு வாங்கக்கூடிய செல்வாக்கு பெற்ற அரசியல் புள்ளிகள் தற்போது இல்லை. கடந்த காலத்தில் மத்திய, மாநில அரசுகளிடம் போராடி திட்டங்களை பெறக்கூடிய அரசியல் செல்வாக்குள்ள நபர்கள் இருந்ததாலே சென்னை உயர் நீதிமன்றம் கிளை, விமான நிலையம், செல்லூர் பாலம், ஒருங்கிணைந்த வேளாண்மை விற்பனை கூடம், வாடிப்பட்டி ஜவுளிபூங்கா, மதுரை இலந்தை குளம் ஐ.டி., பார்க், காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு அருகே மற்றொரு ஐ.டி., பார்க்கிற்கான இடஒதுக்கீடு, மேலூர் இடையப்பட்டி பாலிடெக்னிக், அண்ணா பல்கலைக்கழகத்தின் கிளை பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி, பிளாஸ்டிக் தொழில்நுட்ப கிளை கல்லூரி, காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம், ஒருங்கிணைந்த மதுரை மாட்டுத்தாவணி பஸ்நிலையம் போன்ற திட்டங்கள் மதுரைக்கு கிடைத்தன.
இதில் பல திட்டங்கள் வர முன்னாள் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் பெரு முயற்சி இருந்தது. மு.க.அழகிரி மீது பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும் அவர் அதிகாரத்தில் இருந்த காலக்கட்டத்தில் மதுரைக்கான திட்டங்களை போராடி கொண்டு வர காரணமாக இருந்தார். ஆனால், தற்போது வந்த ‘எய்ம்ஸ்’ திட்டமும் கைநழுவும் நிலையில் இருக்கிறது.
கடந்த இரண்டு சட்டமன்ற தேர்தல்களாக வாக்குறுதியளிக்கப்பட்ட காளவாசல், கோரிப் பாளையம், மேம்பாலங்கள், ரூ.100 கோடி தமிழன்னை சிலை, மோனோ ரயில் திட்டம், மதுரை-தூத்துக்குடி இன்டஸ்ட்ரியல் காரிடர் சாலை போன்றவை தற்போது வரை நிறைவேற்றப்படவில்லை. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இன்னும் முடிவாகவில்லை
இதுகுறித்து அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் கேட்டபோது,
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பார்த்த இடத்தில் தூத்துக்குடியில் மதுரைக்கு வரும் பெட்ரோல், காஸ் பைப் லைன் உள்ளது. அந்த இடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வந்தால் பெரிய ஆபத்து ஏற்பட்டுவிடும் என அதிகாரிகள் தெரிவித்தனர். உடனே நாங்கள், எய்ம்ஸ்க்காக மாற்றுப்பாதையில் அந்த பைப் லைனை கொண்டு சென்று, எய்ம்ஸ் மருத்துவமனையை மதுரைக்கு கொண்டு வருவதற்கு பெரும் முயற்சி எடுத்தோம். ஆனால், மத்திய அரசு அதிகாரிகள் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை.
ஆனால், எய்ம்ஸ் மருத்துவமனை எந்த இடத்தில் அமையப்போகிறது என்பது தற்போது வரை முடிவாகவில்லை. முடிந்தவரை மதுரைக்கு கொண்டு வருவதற்கு மேலிடத்தில் பேசிக் கொண்டிருக்கிறோம். இந்த திட்டத்தால் கன்னியாகுமரி முதல் மதுரை வரை தென் மாவட்ட மக்கள் எல்லோரும் பயன்பெற வாய்ப்புள்ளது, அதற்கான கட்டமைப்பு வசதிகள் மதுரையில் இருக்கிறது என எழுதியும் கொடுத்துள்ளோம். மதுரையின் வளர்ச்சியில் சொந்த மாவட்டக்காரன் என்ற அடிப்படையில் அக்கறையுள்ளவன். காளவாசல், கோரிப்பாளையம், பெரியார் நிலையம் பாலங்களில், கோரிப்பாளையத்தை தவிர மற்ற இரண்டு பாலங்களும் விரைவில் பணிகள் தொடங்கஉள்ளது.
மோனோ ரயில் போன்ற பல திட்டங்கள் இன்னும் வர இருக்கிறது. இதுதவிர 110 அறிவிப்பில் மதுரைக்கு இன்னும் பல திட்டங்களை முதல்வர் அறிவிக்க உள்ளார், என்றார்.
அமைச்சர் சொல்வது சரியா?
இதுகுறித்து ‘எய்ம்ஸ்’ திட்ட ஆய்வுப்பணியில் இருந்த உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: தோப்பூரில் ‘எய்ம்ஸ்’ திட்டத்திற்காக ஒதுக்கிய 200 ஏக்கர் இடத்தில் 160 ஏக்கருக்கும், 40 ஏக்கருக்கும் நடுவில் பெட்ரோல், காஸ் பைப் லைன் செல்கிறது ஆனால், அதுவும் பெரிய பைப் லைன் கிடையாது. சிறிய பைப்பே அந்த இடத்திற்கு அடியில் பதிக்கப்பட்டு செல்கிறது. இந்த பைப், எல்லா மாநிலங்களையும் கடந்து டெல்லி வரை செல்கிறது. எல்லா இடத்திலும் இந்த பைப் லைன் மேலே கட்டிடங்கள், சாலைகள் செல்கின்றன.
இந்த இடத்தை பார்வையிட்ட மத்திய குழு, இந்த பைப் லைன் விவகாரத்தை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. தமிழகத்தில் இந்த ஒரு இடமே அவர்களுக்கு திருப்தியாக இருந்ததாக தெரிவித்தனர். ஆனாலும் அப்போதைய ஆட்சியர் சுப்பிரமணியன், மத்தியகுழு வந்துசென்ற மறுநாளே சம்பந்தப்பட்ட பெட்ரோலியம், எரிவாயு துறை அதிகாரிகள், மற்ற பிற துறை வல்லுநர்களை அழைத்து ஆலோசித்தார்.
அவர்கள், இந்த பைப்-லைனால் எந்த பிரச்சினையும் இல்லை. ஆழமாக தோண்டுவதாக இருந்தால் மட்டும், எங்களிடம் தகவல் சொல்லி தோண்டுங்கள் என்றனர். மொத்தமுள்ள 200 ஏக்கரிலும் மருத்துவமனை கட்டிடங்கள் கட்டப் போவதில்லை. அப்படி இல்லையென்றால் பைப்லைனை மாற்று பாதையில் எடுத்து செல்ல ஆலோசனை வழங்கப்பட்டது. அதனால், இந்த திட்டம் வருவதற்கும், பைப்-லைன் செல்வதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றார்.