பிரதமர் மோடியின் பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு 80 சதவீத மக்கள் ஆதரவு அளிப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
புத்தாண்டை முன்னிட்டு சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் நேற்று செய்தியாளர்களை வைகோ சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி கடந்த நவம்பர் 8-ம் தேதி அறிவித்தார். கறுப்புப் பணத்தை ஒழித்து நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை என்பதால் இதனை தொடக்கம் முதலே நான் ஆதரித்து வருகிறேன். இது எனது தனிப்பட்ட முடிவு மட்டுமல்ல, கட்சியின் ஒருமித்த முடிவாகும்.
கோரிக்கைகள் கடந்த டிசம்பர் 15-ம் தேதி டெல்லி யில் பிரதமர் மோடியை சந்தித்தேன். ‘வார்தா’ புயலுக்கு நிவாரணம் வழங்க வேண்டும், தமிழக மீனவர்களுக்கு எதிராக இலங்கை அரசு கொண்டுவர உத்தேசித்துள்ள சட்டத்தை தடுக்க வேண்டும், ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற அவசரச் சட்டம் கொண்டு வர வேண்டும் என 3 கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தேன்.
இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற வேண்டு மானால் காட்சிப்படுத்தும் விலங்குகள் பட்டியலில் இருந்து காளைகளை நீக்கும் அவசர சட்டத்தை மத்திய அரசு கொண்டுவர வேண்டும். அதற்கான நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டிருப்பதாக அறிகிறேன். நல்லது நடக்கும் என்று நம்புகிறேன்.
அண்டை மாநிலங்களுக்கு பாயும் நதிநீரை தடுக்கும் முயற்சியில் கர்நாடகம், பஞ்சாப் போன்ற மாநிலங்கள் ஈடுபட்டிருப்பது தேசிய ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும். காவிரியின் குறுக்கே கர்நாடகம் அணை கட்டினால் தமிழகத்துக்கு ஒரு சொட்டு நீர் கூட கிடைக்காது.
எனவே, காவிரி நதிநீர் உரிமையைப் பாதுகாக்க நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும்.
வறட்சியினால் பயிர்கள் கருகியதை தாங்க முடியாமல் 70-க்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டும், அதிர்ச்சி மரணத்தாலும் உயிரிழந்துள்ளனர். அவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும். விவசாயிகள் யாரும் தற்கொலை செய்ய வேண்டாம் என முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுக்க வேண்டும்.
முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் மரணம் குறித்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவித்திருப்பது வேதனை அளிக்கிறது. சரியான ஆதாரம் இல்லாமல் இதுபோல கருத்து தெரிவித்திருப்பது துரதிருஷ்டவசமானது.
வரும் பிப்ரவரி 26-ம் தேதி கோவையில் மதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. அதில் கட்சியின் ஓராண்டு செயல்திட்டங்கள் முடிவு செய்யப்படும்.
இவ்வாறு வைகோ கூறினார். பேட்டியின்போது மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.