சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் திமுக-வினர் மீது நடைபெற்ற தாக்குதல் திட்டமிட்ட ஒன்று எனவும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கினை நிலைநாட்ட கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி, ஆளுநர் ரோசய்யாவிடம் திமுக-வினர் நேற்று புகார் மனு அளித்தனர்.
சென்னை மாநகர முன்னாள் மேயர் மா.சுப்ரமணியன், திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மற்றும் சென்னை மாநகராட்சி திமுக உறுப்பினர்கள் அடங்கிய குழு நேற்று காலை 11 மணி அளவில் கிண்டி ஆளுநர் மாளிகைக்குச் சென்றனர். அங்கு ஆளுநர் ரோசையாவை சந்தித்த அவர்கள், இருவேறு புகார் மனுக்களை அவரிடம் அளித்தனர்.
சென்னை மாநகராட்சி திமுக உறுப்பினர்கள் குழு தலைவர் சுபாஷ் சந்திரபோஸ் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:
சென்னை மாநகராட்சி மன்றக்கூட்டம் கடந்த 30-ம் தேதி நடந்தது. இந்தக் கூட்டத்தில் மேயர் சைதை துரைசாமி, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு எதிராக வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு குறித்து பேசினார். அப்போது அந்த தீர்ப்பின் தன்மை குறித்து பேசியவர் திமுக தலைவர் கருணாநிதியை விமர்சித்தார். இதைக்கேட்டதும் அதிர்ச்சியடைந்த திமுக உறுப்பினர்கள் திமுக தலைவர் பற்றிய வார்த்தைகளை மன்ற குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று கூறினோம்.
ஆனால் எதிர்பார்க்காத நேரத்தில் மன்றத்துக்கு வெளியே யிருந்து உள்ளே வந்த அதிமுகவினர் திமுக உறுப்பினர்கள் மீது சரமாரி தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதல் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட ஒன்றாகும். இதற்கு சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமியும், மாநகராட்சி செயலர் ராஜசேகருமே பொறுப்பாவார்கள். எனவே இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இதுபோல், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:ஜெயலலிதா கைதைத் தொடர்ந்து அதிமுகவினர் பல்வேறு வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக அலுவலங்கள், திமுகவினர் மற்றும் அவர்களது உடைமைகள் மீது அதிமுக தரப்பில் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளதை காட்டுகிறது. காவல்துறையினரும் அரசு அதிகாரிகளும் இந்த சம்பவங்களை வேடிக்கை பார்த்து வருகின்றனர். எனவே தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட ஆளுநர் என்கிற முறையில் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.