தமிழகம்

பவானி ஆற்றின் குறுக்கே 6 தடுப்பணைகள் கட்டும் பணி தீவிரம்: பார்வையிடச் செல்லும் தமிழக அதிகாரிகளை தடுக்கும் கேரள போலீஸார்

செய்திப்பிரிவு

பவானி ஆற்றின் குறுக்கே 6 தடுப்பணைகள் கட்டும் பணி தீவிரமடைந்துள்ளது. அவற்றைப் பார்வையிடச் செல்லும் தமிழக அதிகாரிகளை, மாநில எல்லையிலேயே கேரள போலீஸார் தடுத்து நிறுத்துவதாக வேதனை தெரிவிக்கின்றனர் தமிழக பொதுப்பணித் துறை அதிகாரிகள்.

நீலகிரியில் உருவாகி கேரள அமைதிப்பள்ளத்தாக்கு அட்டப்பாடி பகுதியில் நுழைந்து தமிழகப் பகுதிக்குள் வந்து காவிரியில் கலக்கும் பவானி நதியின் குறுக்கே பாடவயல், மஞ்சக்கண்டி, தேக்குவட்டை உள்ளிட்ட 6 இடங்களில் தடுப்பணைகள் கட்டும் பணியில் இறங்கியுள்ளது கேரள அரசு.

இந்த அணைகள் கட்டப்பட்டால் தமிழகத்துக்குள் வரும் பவானி நீர்வரத்து முற்றிலும் தடுக்கப்பட்டுவிடும். கோவை, திருப்பூர் மாவட்டங்களில் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படுவதுடன், பவானிசாகர் மூலம் பாசன வசதி பெறும் லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாழாகும் என்று தமிழக விவசாயிகள் உட்பட அனைத்துத் தரப்பினரும் கவலை தெரிவித்துள்ளனர். இதை எதிர்த்து பல்வேறு கட்சிகள், விவசாய அமைப்புகள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. அணை கட்டும் பணிகளைப் பார்வையிடச் செல்லும் தமிழக அதிகாரிகள் மற்றும் போலீஸாரை கேரள போலீஸார் தடுக்கின்றனர்.

இதுகுறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறும்போது, “கடந்த வாரம் 2 முறை அணை கட்டும் பகுதிக்குச் செல்ல முயன்றபோது, சாவடியூர், புதூரிலும் கேரள போலீஸாரால் தடுக்கப்பட்டோம். உரிய அனுமதியுடன் வருமாறு கூறி, எங்களை திருப்பி அனுப்பிவிட்டனர். பின்னர், களப் பணியாளர்கள் இருவர், கேரள பதிவு எண் கொண்ட இருசக்கர வாகனத்தில் சென்று, அணை கட்டும் பகுதியைப் பார்வையிட்டு வந்தனர். அவர்கள் அளித்த தகவலைக் கொண்டே முதல் அறிக்கை தயார் செய்து, முதன்மைப் பொறியாளருக்கும், அரசுக்கும் அனுப்பினோம். பின்னர், மீண்டும் ஒரு அறிக்கை அனுப்பினோம். ஆனால், மேலிடத்திலிருந்து எந்த பதிலும் இல்லை. கேரள அட்டப்பாடி பவானி ஆற்றில் என்ன நடக்கிறது என்பதை ஆய்வு செய்ய அரசின் அனுமதியும், இரு மாநில போலீஸாரின் பாதுகாப்பும் வழங்குமாறு கேட்டுள்ளோம்” என்றனர்.

இதுகுறித்து மதிமுக நிர்வாகி ஈஸ்வரன் கூறும்போது, “இந்த விவகாரம் தொடர்பாக பொதுப்பணித் துறை உயரதிகாரிகள், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளேன். உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால், அணைகள் கட்டிமுடிக்கப்பட்டுவிடும் என்றும் தெரிவித்துள்ளேன். இந்த விவகாரம் தொடர்பாக இ-மெயிலில் அரசுக்கு அறிக்கை அனுப்புவதாக ஆட்சியர் தெரிவித்தார்” என்றார்.

இதற்கிடையில், “கேரள அரசு 6 தடுப்பணைகள் கட்டத் திட்டமிட்டுள்ளது காவிரி நதிநீர் ஆணையத்தின் விதிமுறைகளை மீறிய செயல். எனவே, அணைப் பணிகளை உடனே நிறுத்துமாறு கேரள அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என்று வலியுறுத்தி பிரதமருக்கு கடிதம் அனுப்பியுள்ளார் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.

நேரடி அனுபவம்

இந்த நிலையில், அட்டப்பாடியில் அணை கட்டும் பகுதியில் நடப்பதைப் பார்க்க நேற்று அதிகாலை சென்றோம். சாவடியூர் சோதனைச் சாவடியில் 24 மணி நேரமும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ள கேரள போலீஸார், தமிழகத்திலிருந்து வரும் வாகனங்களை திருப்பி அனுப்புவதாகவும், மீறிச் சென்றால் வழக்கு பதிவு செய்வதாகவும் தகவல் கிடைத்ததால், வேறு பாதையில் செல்ல வேண்டியிருந்தது.

அங்கிருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது தேக்குவட்டை பகுதி. பவானி நதியை ஒட்டியுள்ள சாலையின் இடதுபுறத்தில் புதிய மண் சாலை அமைக்கப்பட்டுள்ளது.

அங்கிருந்து அரை கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆற்றங்கரையின் வழியை மறித்து, பொக்லைன் இயந்திரம் நிறுத்தப்பட்டுள்ளது. எனவே, இருசக்கர வாகனத்தை அங்கேயே நிறுத்திவிட்டு, மீதி தொலைவு நடந்துசென்றோம்.

ஆற்றின் கரையோரத்தில் உள்ள பாறைகள் வெடி வைத்து உடைக்கப்பட்டிருந்தன. பாறையின் நடுவில் துளையிட்டு, அதில் வெடி வைத்து அவற்றைத் தகர்த்திருந்தனர். மேலும், உடைபடாமல் உள்ள பாறைகளில் நைலான் கயிறு கட்டியும், சிலவற்றில் துளையிட்டும் வைத்திருந்தனர். மேலும், அப்பகுதியில் பாறைத் துகள்கள் அதிக அளவில் குவிந்துகிடந்தன.

அணைக்காக தோண்டப் பட்டிருக்கும் அஸ்திவாரம், அங்குள்ள கட்டுமானப் பொருட் களைக் கணக்கிட்டுப் பார்த்தால், அணை பணிகள் 10 முதல் 15 நாட்களுக்குள் முடிந்துவிடும்போல தெரிகிறது. மீண்டும் திரும்பி வந்து, இருசக்கர வாகனத்தில் தேக்குவட்டை கிராமத்துக்குச் சென்றோம். பிரிவு சாலையிலேயே சிலர் சூழ்ந்து கொண்டு, “தமிழகத்திலிருந்து படம் பிடிக்க வந்தீர்களா” என்று மலையாளத்தில் கேட்டனர். இதையடுத்து, மற்ற 2 அணைகள் கட்டும் பகுதிகளுக்குச் செல்ல முடியாமல், திரும்ப வேண்டியதாயிற்று. மேலும், 2 வாகனங்கள் பின் தொடர்வதையும் காணமுடிந்தது.

இதுகுறித்து அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் கூறும்போது, “இங்கு அணை கட்டப்பட வேண்டுமென்பது இப்பகுதி மக்களின் விருப்பம். இதனால், தமிழகத்திலிருந்து ஏதாவது வாகனம் வந்தாலோ, யாராவது போட்டோ, வீடியோ எடுப்பது தெரிந்தாலோ, உடனடியாக போலீஸுக்குத் தகவல் கொடுத்துவிடுகிறார்கள். அணை பணிகள் காலை 10 மணிக்குத் தொடங்குகின்றன. 25 பேர் பணியில் ஈடுபடுகிறார்கள். பாடவயல், மஞ்சிக்கண்டி அணைப் பணிகளை தற்காலிகமாக நிறுத்திவிட்டு, தேக்குவட்டை அணை வேலைகளை முழுமூச்சாக செய்து வருகிறார்கள்” என்றார்.

SCROLL FOR NEXT