நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடுதலாக வழங்கப்பட்ட 5 நாள் கால அவகாசம் முடிவடைந்தது.
25 வயதுக்கு மேற்பட்டோர் நீட் தேர்வில் பங்கேற்க விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மாணவர்கள் வழக்கு தொடர்ந்தனர். வயது உச்சவரம்பை நீக்கிய உச்ச நீதிமன்றம் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மேலும் 5 நாட்கள் காலஅவகாசம் வழங்கி உத்தரவிட்டது. இதையடுத்து கடந்த 1-ம் தேதி முதல் நீட் தேர்வுக்கு மாணவர்கள் விண் ணப்பிக்கத் தொடங்கினர். நேற்று நள்ளிரவு 11.59 மணியுடன் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் முடிவடைந்தது.
தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருச்சி, நாமக்கல், திருநெல்வேலி, வேலூர் உட்பட நாடுமுழுவதும் 104 நகரங்களில் 2,200 மையங்களில் நீட் தேர்வு நடைபெறுகிறது. தேர்வு முடிவு ஜூன் 8-ம் தேதி வெளியிடப்படுகிறது. கடந்த ஆண்டு ஆங்கிலத்தில் மட்டும் நீட் தேர்வு நடத்தப்பட்டது. இந்த ஆண்டு தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு கன்னடம் உள்ளிட்ட 10 மொழிகளில் நீட் தேர்வு நடை பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.