தமிழகம்

பழநி ரோப்கார் மீண்டும் பழுது: விடுமுறை நாளில் குவிந்த பக்தர்கள் தவிப்பு

செய்திப்பிரிவு

பழநி கோயிலில் 2 மாத பராமரிப்புக்குப் பிறகு மீண்டும் இயக்கப்பட்ட ரோப்கார், நேற்று திடீரென ஏற்பட்ட பழுது காரணமாக 4 மணி நேரம் நிறுத்தப்பட்டது. இதனால், மலைக் கோயிலுக்குச் செல்வதில் பக்தர்கள் சிரமம் அடைந்தனர்.

பழநி கோயிலில் கடந்த ஜூலை 28-ம் தேதி பராமரிப்புப் பணிக்காக ரோப்கார் சேவை நிறுத்தப்பட்டது. 61 நாள்கள் பராமரிப்புப் பணிக்குப் பின் அக். 29-ம் தேதி மீண்டும் ரோப்கார் சேவை தொடங்கியது.

இந்த நிலையில், நேற்று காலை 8.30 மணிக்கு திடீரென நேரிட்ட பழுது காரணமாக ரோப்கார் நிறுத்தப்பட்டது. இதனால், மலைக் கோயில் சுவாமி தரிசனத்துக்கு செல்வதற்காக டிக்கெட் எடுத்து காலை முதலே காத்திருந்த பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதையடுத்து, வின்ச் மற்றும் படிகள் வழியாக மலைக் கோயிலுக்கு பக்தர்கள் செல்லத் தொடங்கினர். இதனால், வின்ச் பகுதியில் கூட்டம் குவிந்தது.

ஆயுத பூஜை தொடங்கி பக்ரீத் வரை தொடர்ந்து 5 நாள்கள் விடுமுறையானதால், உள்ளூர் மட்டுமன்றி வெளி மாவட்டங்கள், மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்களும் நேற்று பழநி கோயிலில் குவிந்தனர். ரோப்கார் பழுதடைந்ததால் வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகள், பெண்கள் உள்ளிட்டோர் மலைக் கோயிலுக்குச் செல்ல முடியாமல் தவித்தனர்.

கோயில் தேவஸ்தானம், தொழில்நுட்பப் பணியாளர்களை கொண்டு ரோப்கார் பழுதை சீரமைத்தனர். 4 மணி நேரத்துக்குப் பிறகு மதியம் 12.30 மணிக்கு மீண்டும் ரோப்கார் சேவை தொடங்கியது. பல லட்சம் ரூபாய் மதிப்பில் 2 மாதம் பராமரிப்பு மேற்கொள்ளப்பட்ட ரோப்கார், மீண்டும் இயக்கப்பட்ட 4 நாளில் பழுதடைந்தால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து பழநி கோயில் இணை ஆணையர் ராஜமாணிக்கத்திடம் கேட்டபோது, ‘குறைந்த மின் அழுத்தம் காரணமாக ரோப்கார் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. மீண்டும் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் இயக்கப்படுகிறது’ என்றார். இதுகுறித்து பக்தர்கள் கூறுகை யில், ‘பழநி கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கானோரும், விழா காலத்தில் லட்சக்கணக்கானோரும் வருகின்றனர்.

ரோப்கார் அடிக்கடி பழுதடை வதால் பக்தர்கள் சிரமப்படுகின்றனர். எனவே, வெளிநாடுகளில் பயன் படுத்தும் நவீன தொழில்நுட்பங் களைப் பயன்படுத்தி தடையின்றி ரோப்கார்களை இயக்க வேண்டும்’ என்றனர். ரோப்கார் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழில்நுட்ப வல்லுநர்கள்.

SCROLL FOR NEXT