தமிழகம்

ஜே.பி.ஏ.எஸ். மகளிர் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

செய்திப்பிரிவு

சென்னை தேனாம்பேட்டை ஜே.பி.ஏ.எஸ். மகளிர் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு இன்று (சனிக்கிழமை) காலை நடைபெற்றது.

தேனாம்பேட்டையில் உள்ள நீதியரசர் பஷீர் அகமது சயீத் மகளிர் கல்லூரியில், முன்னாள் மாணவர்களின் சந்திப்பு இன்று (சனிக்கிழமை) காலை நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முன்னாள் மாணவர்கள், தங்களின் பழைய நினைவுகளைப் பரிமாறிக்கொண்டனர். தாங்கள் படித்த வகுப்புகளுக்குச் சென்று, தங்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியர்களிடம் பேசினர். காலச்சுழலில் விலகிப் போயிருந்த தங்களின் நண்பர்களை கண்டு மகிழ்ந்தனர்.

இந்த விழாவைத் தாளாளர் ஃபைஸுர் ரஹ்மான் தொடங்கி வைக்க, கல்லூரி முதல்வர் முனைவர் ஷானாஸ் அகமது அனைவரையும் வரவேற்றார். முதன்மைப் பேச்சை கல்லூரி தலைவர் மூசா ரஸா தொடங்கி வைத்தார். முன்னாள் மாணவர்கள் சங்க இணைச் செயலாளர் மஹ்ஜாப்தீன், சங்கத்தின் செயல்பாடுகள் குறித்த அறிக்கையைச் சமர்ப்பித்தார்.

இந்த விழாவில், மலேசியாவின் சாராவாக் மாகாண ஆளுநர் துன் பஹான் ஸ்ரீ ஹாஜி அப்துல் மஹ்மூத் மற்றும் அவரது மனைவி கலந்து கொண்டனர். அவர்களுடன் சாராவாக் மாகாண சபாநாயகர், மலேசிய பொது ஆலோசகர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.

சாராவாக் மாகாண ஆளுநர் பெண்களின் கல்விக்காக, ஜே.பி.ஏ.எஸ்.கல்லூரிக்கு ரூ. 10 லட்சத்தை வழங்கினார். விழாவில் ஆறு முன்னாள் மாணவ சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டன. மலேசிய கல்வியாளர் திருமதி அம்பிகாபதி தியாகராஜா, வாழ்நாள் வல்லுநர் சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார்.

சாராவாக் ஆளுநரிடம் முன்னாள் மாணவரும், நியூஸ் எக்ஸ் தொலைக்காட்சியின் துணை ஆசிரியருமான பிரியம்வதா விருது பெற்ற போது

அரசியல் ஆர்வலரும், சமூக சேவகருமான திருமதி. பாத்திமா முஸாஃபருக்கு முன்னாள் மாணவ சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. மேலும் சம்பூர்ணா, பிரியம்வதா, சனோபார் சுல்தானா மற்றும் ஐஸ்வர்யா ஆகியோருக்கு சாராவாக் மாகாண ஆளுநர் துன் பஹான் ஸ்ரீ ஹாஜி அப்துல் மஹ்மூத் விருது வழங்கிச் சிறப்பித்தார்.

SCROLL FOR NEXT