காவிரி பிரச்சினைக்கு தீர்வு காண பிரதமரை சந்தித்து பேச வேண்டும் என தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு வைகோ, ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வைகோ
கடலூர் மாவட்டம், சேத்தியாத் தோப்பில் நேற்று ஒரு திருமண விழாவில் கலந்துகொண்ட வைகோ பேசியதாவது:
உச்ச நீதிமன்ற தீர்ப்பை பொருட்படுத்தாமல் தமிழகத்துக்கு தர வேண்டிய காவிரி நீரை கர்நாடக அரசு திறந்துவிட மறுக்கிறது. கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறந்து விட மறுத்ததால் குறுவை நெல் சாகுபடி பொய்த்துப் போனது. தொடர்ச்சியாக அவர்கள் தண்ணீர் விடாவிட்டால் சம்பா சாகுபடியும் அதே நிலையை அடையும்.
காவிரி நதி நீர் பிரச்சினையில் முதல்வர் ஜெயலலிதா எடுத்துள்ள முடிவை வரவேற்கிறேன். முதல்வர் ஜெயலலிதா அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி காவிரியில் தண்ணீர் திறந்துவிடவும், சிறுவானி ஆற்றில் அணை கட்டும் பணியை தடுக்கவும் பிரதமரை சந்தித்து கோரிக்கை அளிக்க வேண்டும் என்றார்.
ஜி.கே.வாசன்
மதுரையில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
காவிரி பிரச்சினையில் மாநிலத் துக்குள் நிலவும் சூழ்நிலைக்கேற்ப செயல்படாமல், உச்ச நீதிமன்ற உத்தரவை மதித்து கர்நாடகா செயல்பட வேண்டும். காவிரி, முல்லை பெரியாறு விவகாரத்தைத் தொடர்ந்து சிறுவாணி பிரச்சினையும் வந்துவிட்டது. கடந்த ஐந்தரை ஆண்டுகளாக நடைபெறும் அதிமுக ஆட்சியில் பிரச்சினைகள் தீரவில்லை; வளர்ந்துகொண்டுதான் உள்ளன.
தமிழக முதல்வர், உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்தி, தலைவர்களின் கருத்தைக் கேட்க வேண்டும். புதுடெல்லி சென்று பிரதமரை சந்தித்து, நியாயத்தின் பக்கம் செயல்படுமாறு வலியுறுத்த வேண்டும் என்றார்.
தமிழிசை சவுந்தரராஜன்
கோவையில் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
காவிரியில் இருந்து தற்போது திறக்கப்படும் தண்ணீர் சம்பா பாசனத்துக்கு போதுமானதாக இருக்காது. எனவே, கூடுதலாக 25 டிஎம்சி தண்ணீரை கர்நாடக மாநிலத்திடம் இருந்து பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கர்நாடகத்தில் தற்போது நடைபெறும் போராட்டங்கள் தேசிய உணர்வு இல்லாதவர்களால் நடத்தப்படுகின்றன. அங்கு வசித்து வரும் தமிழர்களின் பாதுகாப்பு குறித்து கர்நாடக மாநில முதல்வரிடம் தமிழக முதல்வர் பேச வேண்டும். இந்த பிரச்சினை தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி விவாதிக்க வேண்டும்.
சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவது தொடர்பான ஆய்வுக்கு அனுமதி அளித்தது தொடர்பாக, மத்திய நீர்வளத் துறைக்கு எதிராக தமிழக பாஜக தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. இந்த பிரச்சினையில் இரு மாநில உரிமைகளும் பாதிக்கப்படாதவாறு மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்றார்.