காவல் ஆணையர் அலுவலகத்தில் கொடுக்கப்படும் புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதனால், இங்கு வந்து புகார் கொடுக்க பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். திங்கள்கிழமை ஒரே நாளில் 136 புகார் மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் திங்கள் முதல் வெள்ளி வரை பொதுமக்களிடம் இருந்து புகார் மனுக்கள் பெறப்படுகின்றன. இதற்காக காலை 9.30 மணி முதல் மதியம் 1 மணி வரை நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. தங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்து யாருடைய இடையூறும் இல்லாமல் பொதுமக்கள் புகார் கொடுக்க வேண்டும் என்பதற்காக இந்த திட்டம் உருவாக்கப்பட்டது. சென்னை காவல் ஆணையர் ஜார்ஜின் நேரடி மேற்பார்வையில் இது செயல்படுகிறது.
சென்னையில் மொத்தம் உள்ள 12 காவல் மாவட்டங்களில் இருந்து 12 பேர், மத்திய குற்றப்பிரிவில் இருந்து 2 பேர், பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்று பதிவு செய்வதற்கென்று 10 பேர் இந்தப் பிரிவில் பணியாற்றுகின்றனர். இவர்கள் அனைவரும் கூடுதல் துணை ஆணையர் ஷியாமளாதேவி மேற்பார்வையின் கீழ் செயல்படுகின்றனர்.
இங்கு கொடுக்கப்படும் புகார்கள் குடும்பத் தகராறு, சொத்துப் பிரச்சினை, இடம் விவகாரம், நிதி மோசடி, ஏமாற்றுதல், மிரட்டல் என பிரிவுவாரியாக பிரிக்கப்படும். பின்னர் புகாரின் தன்மையை வைத்து அவசரம், நடவடிக்கை, உடனடி நடவடிக்கை என மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகின்றன.
புகார் மனுக்கள் அனைத்தும் அந்தந்த காவல் மாவட்டத்தின் துணை ஆணையருக்கு நேரடியாக அனுப்பப்படும். பின்னர் அந்த மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து இரண்டு நாட்களில் அவர்கள் கூடுதல் காவல் ஆணையர் நல்லசிவத்துக்கு பதில் அளிக்க வேண்டும். புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட புகார்தாரர்களிடம் தனிப்பிரிவு போலீசார் போனில் விசாரிப்பர். புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிந்தால், சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் அதுகுறித்து விளக்கமும் கேட்கப்படுகிறது.
இதுபோன்ற நடைமுறைகள் இருப்பதால் காவல் ஆணையர் அலுவலகத்தில் கொடுக்கப்படும் புகார் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படுகின்றன. தினமும் புகார் கொடுத்தவர்களின் பட்டியலையும், அவர்களின் பிரச்சினைகளையும் ஆணையர் ஜார்ஜ் பார்த்து, அதில் முக்கியமான 25 புகார்களை தேர்ந்தெடுத்து உடனடி நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடுகிறார். இதனால், ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்க பொதுமக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.