ஆந்திர சிறையில் குற்றமற்ற நிலையில் வாடுகின்ற 32 தமிழர்களை விடுவிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழகத்திலிருந்து அண்டை மாநிலங்களுக்கு வேலைக்காக பலபேர் செல்கின்றனர். அவ்வாறு ஆந்திராவிற்கு செல்கின்ற தமிழக கூலித் தொழிலாளர்களை அம்மாநில அரசு சந்தேகத்தின் பேரிலும், செம்மரம் கடத்துவதாகவும் பொய்வழக்கு போட்டு கைது செய்து, சிறையில் அடைப்பது வாடிக்கையாகிவிட்டது.
தற்போது தமிழகத்தில் திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து 29 பேர், வேலூர் மாவட்டத்திலிருந்து 2 பேர், சென்னையிலிருந்து ஒருவர் என மொத்தம் 32 பேர் திருப்பதிக்கு சென்ற போது அங்கே அவர்களை ஆந்திர காவல்துறை கைது செய்திருக்கிறது.
ஆந்திர காவல்துறையினரின் இச்செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது. காரணம் கூலி வேலைக்குச் செல்லும் தொழிலாளர்கள் மீது சந்தேகத்தின் பேரில் அவர்களை பார்க்கும் இடங்களில் எல்லாம் விசாரணை என்ற பெயரில் கைது செய்து, சிறையில் அடைக்கிறார்கள்.
எந்த தவறும் செய்யாத நிலையில் அப்பாவித் தமிழர்களை ஆந்திர அரசு தொடர்ந்து கைது செய்து வருகிறது. ஏற்கெனவே இதுபோன்று சுமார் 450 க்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்களை ஆந்திர காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்தது. அதன்பின் 2 ஆண்டுகளுக்கு பின் நீதிமன்றத்தால் இவர்கள் குற்றமற்றவர்கள் என தீர்ப்பு வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.
ஆந்திர அரசு செம்மரம் கடத்துவோர் மீது தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு பதிலாக அப்பாவி கூலித் தொழிலாளர்கள் மீது வீண்பழி போடுவது மிகவும் தவறானது. செம்மரம் கடத்தும் செயலில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்காக எந்தவித தவறும் செய்யாமல் இருப்போர்கள் மீது பொய்யான வழக்கு போட்டு, அவர்களை சிறையில் அடைப்பது சட்டம் ஒழுங்கை மீறுகின்ற செயலாகும். எனவே ஆந்திர அரசின் இது போன்ற நியாயமற்ற செயலை தமிழக அரசு கண்டிக்க வேண்டும்.
மேலும், தமிழக அரசு ஆந்திர அரசோடு பேசி இனி ஒருபோதும் அப்பாவித் தமிழர்களை துன்புறுத்தவோ, கைது செய்யவோ, சிறையில் அடைக்கவோ கூடாது என்பதை கண்டிப்போடு தெரிவித்துக் கொள்ள வேண்டும்.
மேலும், ஆந்திர சிறையில் குற்றமற்ற நிலையில் வாடுகின்ற தமிழர்களை ஆந்திர அரசு விடுவிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு மத்திய அரசிடம் ஆந்திர அரசின் மனிதாபிமானமற்ற இச்செயலை எடுத்துக்கூறி இனிமேல் இது போன்ற செயல்களில் ஆந்திர அரசு ஈடுபடக்கூடாது என்பதை உறுதிப்படத் தெரிவித்துக் கொள்ள வேண்டும்.
மத்திய அரசும் ஆந்திர அரசோடு தொடர்பு கொண்டு ஆந்திர சிறையில் வாடுகின்ற அப்பாவித் தமிழர்களுக்கு நியாயம் கிடைக்க வழி வகை செய்ய வேண்டும்'' என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.