தமிழகம்

‘காளை நல்லாயிருந்தால்தான் கழனி நல்லாயிருக்கும்!’- ஜல்லிக்கட்டுக்காக நவீன பிரச்சாரத்தில் பட்டதாரி

கே.கே.மகேஷ்

“காளை நல்லாயிருந்தால்தான் கழனி நல்லாயிருக்கும். கழனி நல்லாயிருந்தால்தான் ஊர் நல்லா யிருக்கும். ஊர் நல்லாயிருந் தால்தான் நாடு நல்லாயிருக்கும்” என்று ஜல்லிக்கட்டுக்காக ஊர் ஊராகச் சென்று பிரச்சாரம் செய்து வருகிறார் மதுரை பட்டதாரி இளைஞர்.

காரின் நான்கு பக்கமும் ஜல்லிக்கட்டுக் காளைப் படங்கள், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான வாசகங்களுடன் தனது காரையே பிரச்சார வாகனமாக மாற்றி வலம் வருகிறார் மதுரையைச் சேர்ந்த முகமது இத்ரிஸ்.

பிரச்சாரம் குறித்து யார் கேட்டாலும் காரை நிறுத்தி இறங்கி அவர்களிடம் விவரிக்கிறார்.

“பொங்கல் திருநாளுக்கு இன்னும் ஒரு வாரம்தான் இருக்கிறது. நம் பாரம்பரிய விளையாட்டை நடத்தக்கூடாது என்று தடை போட்டு வைத்திருக்கிறார்கள். அதைப்பற்றிய கவலையின்றி எல்லோரும் மூன்று நேரமும் நன்றாகச் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறோம்.

காளை நல்லாயிருந்தால்தான் கழனி நல்லாயிருக்கும். கழனி நல்லாயிருந்தால்தான் ஊர் நல்லா யிருக்கும். ஊர் நல்லாயிருந் தால்தான் நாடு நல்லாயிருக்கும். ‘நம் நாட்டுக் காளையினம் அழிந்தால், பாரம்பரிய விவசாயம் கெடும், பாரம்பரிய விவசாயம் கெட்டால் நாடும், மக்களும் என்னாவார்கள்?’’ என்று கூறும் இத்ரிஸுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது.

அவரைப் பற்றியும், அடுத்தகட்ட திட்டம் பற்றியும் கேட்டபோது, “சிவகங்கை மாவட்டம் லாடனேந்தல் என் சொந்த ஊர். எம்பிஏ படித்துவிட்டு, மதுரையில் தொழில் செய்கிறேன். தாய், தந்தை இருவருமே விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். எல்லா விவசாய வீடுகளையும்போல, பாதிக் குழந்தைகளைப் பெற்றவர்கள் வளர்த்தால், மீதிப்பிள்ளைகளை மாடுகள்தான் வளர்த்தன. அந்தக் காளையினத்தை அழிக்க வெளி நாட்டினர் சதித்திட்டம் தீட்டுகி றார்கள் எனும்போது, மாட்டுக்கு இருக்கிற நன்றி உணர்ச்சி நமக்கு வேண்டாமா? என்றுதான் பிரச்சாரத்துக்கு கிளம்பினேன். ஜல்லிக்கட்டு நடக்கிற வரை பிரச்சாரம் செய்வேன்” என்றார்.

SCROLL FOR NEXT