உலகத் தமிழ் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 80 பேர் திருச்சி மத்திய சிறையில் இருந்து இன்று காலை விடுவிக்கப்பட்டனர். மதுரை உயர் நீதிமன்றக் கிளை வழங்கிய ஜாமினை அடுத்து அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
சிறை வாயிலில் அவர்களை, புதிய பார்வை ஆசிரியர் எம்.நடராஜன், உலகத் தமிழ் பேரமைப்பு தொண்டர்கள், மதிமுக தொண்டர்கள் ஆகியோர் வரவேற்றனர்.
சிறையில் இருந்து வெளிவந்த பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த பழ.நெடுமாறன்: தஞ்சை விளார் கிராமத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு முற்றச்சுவரை இடித்த அதிகாரிகள் மீது தமிழக முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து மீண்டும் அந்த இடத்தில் அதனை அமைக்க முயற்சி மேற்கொள்ளப்படும் என்றார்.
தஞ்சையில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதி என சொல்லப்பட்ட இடத்தை நெடுஞ்சாலைத்துறையினர் மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டபோது அவர்களைப் பணி செய்யவிடாமல் தடுத்தது உள்ளிட்ட சில வழக்குகளில் தமிழ் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் உள்ளிட்ட 81 பேர் தஞ்சை காவல்துறையினரால் கடந்த 13- ஆம் தேதியன்று கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவர்கள் அனைவரும் பிணையில் தங்களை விடுவிக்கக் கோரி மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் விண்ணப்பித்திருந்தனர்.
சில நிபந்தனைகளுடன் இவர்கள் பிணையில் செல்ல உத்தரவிட்டி ருந்தார் உயர் நீதிமன்ற நீதிபதி. அந்த உத்தரவைச் செயல்படுத்துவதில் நீதித்துறையில் உள்ளவர்களுக்கும் நெடுமாறன் தரப்பு வழக்கறிஞர்களுக்கும் இடையே வேறுபட்ட கருத்து நிலவியதால் நெடுமாறன் உள்ளிட்ட அனைவரும் வியாழக்கிழமை பிணையில் வெளியாக முடியவில்லை.