முதல்வர் ஜெயலலிதா, முன்னாள் முதல்வர் கருணாநிதி, நடிகர் ரஜினிகாந்த் என அதிமுக்கிய பிரபலங்கள் வசிக்கும் தொகுதி இது. கூடுதலாக, தலைமைச் செயலகம், துறைமுகம், காவல் துறை ஆணையர் அலுவலகம், உயர் நீதிமன்றம், எழிலகம் போன்றவையெல்லாம் இருக்கும் தமிழகத்தின் இதயப் பகுதி எப்படி இருக்கிறதென்று தெரிந்துகொள்ள வேண்டுமா? இதோ பார்ப்போம்...
# சேத்துப்பட்டு, திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், எழும்பூர், புதுப்பேட்டை, சிந்தாதிரிப்பேட்டை, மண்ணடி, பாரிமுனை, முத்தியால் பேட்டை, துறைமுகம் உள்ளிட்ட இடங்களில் அண்ணாந்து பார்க்கும் மாளிகைகளும் அதனடியில் ஓலைக் குடிசைகளும் மிக சகஜம்.
குடிசைப் பகுதிகளில் அடிப்படை வசதிகள் இல்லவே இல்லை எனலாம். கூவம் கரையோரக் குடிசைப் பகுதி மக்களுக்கு அடுக்குமாடிக் குடியிருப்புகள் அல்லது நகரை ஒட்டிய பகுதிகளில் மாற்று இருப்பிடம் தேவை என்பது பிரதானக் கோரிக்கையாக இருக்கிறது. திருவல்லிக்கேணி, பாரிமுனை, சிந்தாதிரிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் குப்பைகள் தெருவுக்குத் தெரு தேங்கிக்கிடக்கின்றன என்பது பெரும்பான்மை மக்களின் அதிருப்தி.
# நிமிடத்துக்கு ஒரு பேருந்து, மின்சார ரயில், பறக்கும் ரயில் என தொகுதி முழுவதுமே பொதுப் போக்குவரத்து மிகச் சிறப்பு. ஆனால், அதற்கேற்ற சாலை வசதிகள் இல்லாதது மக்களின் கடும் அதிருப்தியைச் சம்பாதித் திருக்கிறது. சுமார் 20 ஆண்டுகளான அரதப் பழசான சாலைகள் புதுப்பிக்கப்படவோ விரிவாக்கப்படவோ இல்லை. துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டம் பாதியில் நிற்கிறது.
இதனால், திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, பாரிமுனை, மண்ணடி, அயனாவரம் நெடுஞ்சாலை, கோடம்பாக்கம் நெடுஞ்சாலை, அண்ணாநகர், திருமங்கலம் சந்திப்பு ஆகிய முக்கியப் பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது.
# மொத்தத் தொகுதியிலும் குடிநீர் விநியோகம், மின்சார விநியோகம் பிரச்சினை இல்லை. தொகுதியில் பரவலாக நடுத்தர மற்றும் ஏழை மக்கள் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மகப்பேறு மருத்துவமனைகளைப் பாராட்டுகிறார்கள்.
குறிப்பாக, திருவல்லிகேணி, மீர்சாகிப்பேட்டை, சிந்தாதிரிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் மகப்பேறு மருத்துவமனைகளில் சுகப்பிரசவம் சுமார் 90 சதவீதத்தைத் தாண்டுகிறது. அதேபோல தொகுதி முழுமைக்கும் பள்ளி, கல்லூரிகள்குறித்தும் மக்கள் சிறப்பான கருத்துகளையே தெரிவித்தார்கள்.
# சேப்பாக்கம், சிந்தாதிரிப்பேட்டை பகுதிகளில் சுமார் 3,000 ஆட்டோ பழுது நீக்கும் சிறு பட்டறைகள் இருக்கின்றன. மதுரவாயல் - துறைமுகம் பறக்கும் சாலைத் திட்டத்துக்காக அவற்றை மறைமலை நகருக்கு மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதனால், சுமார் ஒரு லட்சம் தொழிலாளர்கள் பதறிப்போயிருக்கிறார்கள். மண்ணடியின் இரும்புத் தொழிற்கூடங்கள், புதுப்பேட்டையின் ஆட்டோமொபைல்ஸ் உதிரிபாக விற்பனை மார்க்கெட், ரிச்சி தெருவின் மின்னணுக் கருவிகள் மார்க்கெட் ஆகியவற்றுக்கும் இதே நிலைதான்.