தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்று தென் இந்திய நதிகள் இணைப்புச் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்தார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், வறட்சி நிவாரண நிதியை உடனே வழங்க வேண்டும், நதிகள் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய நதிகள் இணைப்புச் சங்கம் சார்பில் டெல்லியில் கடந்த 14-ம் தேதி முதல் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இவர்கள் ஒவ்வொரு நாளும் வித்தியாசமான முறையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று எலிக்கறி சாப்பிடுவதாகக் கூறி போராட்டம் நடத்திய விவசாயிகள், இன்று பாம்புக்கறி உண்பதாகக் கூறி போராட்டம் நடத்தத் திட்டமிட்டனர். ஆனால் இதையறிந்த டெல்லி வனத்துறையினர், வனவிலங்கு பாதுகாப்பு சட்டப்படி அது குற்றமாகிவிடும் என சுட்டிக்காட்டினர். இதையடுத்து நேற்று பிரதமர் மோடி போல் முகமூடி அணிந்த ஒருவரை அமரவைத்து அவரிடம் மனு கொடுப்பது போல் போராட்டம் நடத்தினர். பிரதமர் தங்களை சந்திக்க நேரம் ஒதுக்காததை கண்டித்து இப்போராட்டம் நடத்தியதாக விவசாயிகள் கூறினர்.
இந்நிலையில் இன்று அரசியல் பிரமுகர்கள் பலர் விவசாயிகளை சந்தித்தனர். தமாகா தலைவர் ஜி.கே.வாசன், மக்களவை துணை சபாநாயகர் எம்.தம்பிதுரை, தமிழக வேளாண் அமைச்சர் துரைக்கண்ணு, புதுச்சேரி முதல்வர் வி.நாராயணசாமி, ஆம் ஆத்மி கட்சியின் தமிழக பொறுப்பாளர் சோம்நாத் பாரதி ஆகியோர் விவசாயிகளை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
விவசாயிகளை சந்தித்த பிறகு தம்பிதுரை கூறும்போது, “தமிழக விவசாயிகள் நாட்டுக்கே வழிகாட்டியாக இங்கு போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளின் குறைகளை மத்திய அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்லவே நானும் தமிழ வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணுவும் இங்கு வந்துள்ளோம். அம்மாவால் உருவாக்கப்பட்ட நாங்கள் விவசாயிகளின் குறைகளை தீர்க்கக் கடமைப்பட்டுள்ளோம். பிரதமரையும் உள்துறை, நிதி, வேளாண் துறை அமைச்சர்களையும் சந்தித்து கோரிக்கைகளை வலியுறுத்துவோம்” என்றார்.
அவர்களின் போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகள், விவசாய அமைப்புகள் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் இன்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அப்போது, அவர்களுடன் தி.மு.க. எம்.பி.யான திருச்சி சிவாவும் இருந்தார்
பின் தென் இந்திய நதிகள் இணைப்பு சங்கத்தலைவர் அய்யாக்கண்ணு செய்தியாளர்களிடம் கூறும்போது, 'ஜெட்லியை சந்தித்ததில் மன நிறைவு அடைந்துள்ளோம். எங்களை அமரவைத்து, கோரிக்கைகளை அவர் கேட்டறிந்தார். இதையடுத்து, எங்களது கோரிக்கைகளை பரிசீலிப்பதாக தெரிவித்தார். எங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்' என்றார்.