தமிழகம்

புதுச்சேரிக்கு வந்தது ‘ஹோவர்கிராப்ட்’

செய்திப்பிரிவு

இந்திய கடலோரக் காவல்படை சார்பில் தண்ணீரிலும், கரையிலும் இயங்கும் அதிநவீன மிதவைப் படகான ’ஹோவர்கிராப்ட்’, புதுச்சேரிக்கு திங்கள்கிழமை வந்தது. பத்து நாட்களுக்கு பரிசோதனை அடிப்படையில் இந்த மிதவை ஊர்தி செயல்பட உள்ளது.

இந்திய கடலோரக் காவல்படை சார்பில் புதுச்சேரி லைட் ஹவுஸ் பகுதியிலுள்ள கடற்கரைப் பகுதியில் அதி நவீன மிதவை ஊர்தி நிற்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கடலிருந்து கரை சரிவானதாக இல்லாமல் இருந்ததையடுத்து அதை சரி செய்து படகை ஏற்றி நிறுத்தினர்.

படகில் வந்த கமாண்டர் சைலேஷ் குப்தாவை, புதுச்சேரி கடலோரக் காவல்படைக் கமாண்டர் சோமசுந்தரம் வரவேற்றார்.

அதன்பிறகு கமாண்டர் சோமசுந்தரம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

புதுச்சேரி கடலோர பாதுகாப்புக்காவும், மீனவர் பாதுகாப்புக்காகவும் இந்திய கடலோர காவல்படை சார்பில் புதிய அதிநவீன மிதவை படகு வந்துள்ளது. இது தண்ணீரிலும், கரையிலும் இயங்கும். திங்கள் முதல் பத்து நாட்களுக்கு இப்படகு புதுச்சேரியில் நிற்கும். தற்போது சென்னையிலிருந்து வந்துள்ள இப்படகில் அனைத்து அதிநவீன வசதிகளும் உள்ளன.

புதுவையில் வடக்கு, தெற்கு பகுதிகளில் 60 நாட்டிக்கல் மைல் தொலைவுக்கு நாள்தோறும் மிதவை ஊர்தி செல்லும். பரிசோதனை அடிப்படையில் புதுவையில் பத்து நாட்களுக்கு இயக்கப்படும். தற்போது மண்டபம், கொல்கத்தா, குஜராத் ஆகிய இடங்களில் மட்டும் தலா இரு படகுகள் உள்ளன. விரைவில் புதுச்சேரிக்கு இப்படகு நிரந்தரமாக வரவுள்ளது. அது இங்கிலாந்தில் தயாராகி வருகிறது என்று தெரிவித்தார்.

படகின் கமாண்டர் சைலேஷ் யாதவ் கூறுகையில், "புதுவைக்கு முதல் முறை வந்துள்ளோம். இந்தியாவிலேயே மிதவை ஊர்தியில் அதிநவீன படகு இது. இங்கிலாந்தில் தயாரானது. சில மாதங்களுக்கு முன்புதான் இங்கு வந்தது. தற்போது புதுச்சேரிக்கு தயாராகி வரும் படகு இங்கிலாந்திலிருந்து பிப்ரவரி முதல்வாரத்தில் வந்தடையும்" என்றார்.

SCROLL FOR NEXT