தமிழகம்

மதக் கலவர தடுப்பு மசோதாவை நிறைவேற்றக் கூடாது: ராம.கோபாலன்

செய்திப்பிரிவு

மதக்கலவர தடுப்பு மசோதாவை நிறைவேற்றக் கூடாது என்று இந்து முன்னணி நிறுவனத் தலைவர் ராம. கோபாலன் தெரிவித்தார்.

இது குறித்து விருதுநகரில் செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது, "நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கொண்டுவரவுள்ள மதக்கலவர தடுப்பு மசோதைவை நிறைவேற்ற விடமாட்டோம். சிறுபான்மையினரைத் திருப்திப்படுத்தி அவர்களின் ஓட்டுகளை வாங்குவதில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது. இந்த மசோதாவுக்கு தமிழக முதல்வர் எதிர்ப்பு தெரிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை மாநிலங்களின் உரிமைகளில் தலையிடுவதாக உள்ளது. இது பலருக்குத் தெரியாது.

தமிழகத்தில் நடைபெறும் தீவிரவாத செயல்களைத் தடுக்க பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை தமிழக அரசு கொண்டுவர வேண்டும். பக்ருதீன், பிலால்மாலிக் போன்றோரை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைத்து இதுபோன்ற வழக்குகளை மட்டுமே விரைவில் விசாரித்து முடிக்க வேண்டும்.

அயோத்தியில் மத்திய அரசே ராமர் கோயில் கட்டிக்கொடுக்க வேண்டும். இந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் அதற்கான தீர்மானத்தை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும். ராமர் பாலம் இருப்பது குறித்து வரலாற்று அறிஞர்களும், கடல் சார்ந்த ஆராய்ச்சியாளர்களும் நிரூபித்துள்ளனர். ராமர் பாலத்தை இடிக்கும் முயற்சியை இந்து முன்னணி எதிர்க்கும். ராமர் பாலத்தைக் காப்பாற்றியே தீரவேண்டும்.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டித்தர வலியுறுத்தி டிச. 6-ம் தேதி சென்னையில் 17 இடங்கள் உள்பட தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன. நரேந்திர மோடி பிரதமராக வரவேண்டும் என்பதில் கருத்து வேறுபாடு இல்லை. வடமாநிலங்களில் மட்டுமின்றி தமிழகத்திலும் மோடி ஆதரவு அலை வீசுகிறது. எந்தத் தேர்தல் வந்தாலும் இந்து முன்னணி பாஜகவைத்தான் ஆதரிக்கும்" என்றார்.

SCROLL FOR NEXT