தமிழகம்

ஜெயலலிதாவுக்கு ரஜினி, மேனகா வாழ்த்து: பாஜக அதிர்ச்சி

செய்திப்பிரிவு

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு, நடிகர் ரஜினிகாந்தும், மத்திய அமைச்சர் மேனகா காந்தியும் நலன் விசாரித்தும், ஆதரவு கூறியும் உணர்வுப்பூர்வமாக வாழ்த்துக் கடிதம் எழுதியுள்ளது, தமிழக பாஜக மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயலலிதாவுக்கு நடிகர் ரஜினிகாந்த் அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில் ‘ஜெயலலிதா ஜி, நீங்கள் மீண்டும் போயஸ் தோட்டத்துக்கு திரும்பியதற்கு மகிழ்ச்சி அடைகிறேன். உங்களுக்கு இனிதான எதிர்காலம் அமைய பிரார்த்தனை செய்கிறேன். நீங்கள் நல்ல உடல் நலத்துடன், அமைதியுடன் வாழ வாழ்த்துகிறேன்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

ரஜினியின் மனிதாபிமான சிந்தனைகளின் வெளிப்படையாகவே இதனை பார்ப்பதாக அதிமுக தலைவர்கள் பலர் தெரிவித்துள்ளனர்.

மேலும், ஜெயலலிதாவுக்கு கட்சி எல்லையைக் கடந்தும் முக்கியப் பிரமுகர்கள் பலர் அனுதாபம் தெரிவித்து வருகின்றனர் என அதிமுகவினர் சுட்டிக் காட்டினர்.

ரஜினியை வசப்படுத்த வெகு நாட்களாக வியூகம் வகுத்துவருகிறது பாஜக என்பது தெரிந்ததே. இந்நிலையில், டிசம்பர் மாதம் அவர் நடித்துள்ள லிங்கா திரைப்படம் திரைக்கு வரவுள்ளது. அந்தப் படத்திற்கு சிக்கல் வரக்கூடாது என்பதற்காகவே ரஜினிகாந்த் கடிதம் எழுதியிருக்கிறார் என கூறப்படுகிறது.

மகாராஷ்டிரா, ஹரியாணா மாநிலங்களில் ஆட்சி அமைக்க பாஜக தயாராகிய அதேநாளில் ரஜினிகாந்த், ஜெயலலிதாவுக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பியிருக்கிறார்.

இது குறித்து தமிழ் திரைத்துறை வட்டாரம் கூறியதாவது, "நடிகர் ரஜினிகாந்த் எப்போதுமே தனது தொழில் பாதிக்கக்கூடாது என்பதில் கவனமாக இருப்பார். அவரது திரைப்படம் வெளியாவதற்கு முன்னர் எவ்வித அரசியல் சர்ச்சைக்குள்ளும் சிக்க அவர் விரும்பமாட்டார்" என தெரிவித்துள்ளது.

ரஜினிகாந்தை பாஜகவுக்கு சாதகமாக அரசியலுக்கு இழுப்பதில், ஆரம்பத்தில் இருந்தே அக்கட்சிக்குள் இருவேறு கருத்துகள் நிலவி வருகின்றன.

இந்நிலையில், ரஜினியின் கடிதம் குறித்து தமிழக பாஜகவின் முக்கியப் பிரமுகர் ஒருவர் கூறுகையில், "ரஜினியின் கடிதம் பாஜகவுக்கு ஒரு செய்தியை மறைமுகமாக உணர்த்தியுள்ளது. அதாவது, தீவிர அரசியலில் தான் இப்போதைக்கு ஈடுபடப்போவதில்லை என்பதே அச்செய்தியாகும்.

தமிழக பாஜக தலைவர்கள் தொடர்ந்து ரஜினிக்கு அழைப்பு விடுத்துவருகின்றனர். பாஜக தேசியத் தலைவர்களுடன் ரஜினிகாந்த் காட்டிய நெருக்கத்தின் அடிப்படையில் ரஜினிகாந்துக்கு பாஜக அழைப்பு விடுத்துவருகிறது.

ஆனாலும், ரஜினி அதை ஏற்றுக்கொள்வாரா என்ற சந்தேகம் எங்களுக்கு எப்போதுமே இருந்திருக்கிறது. அந்த சந்தேகத்துக்கு , அவர் இப்போது ஜெயலலிதாவுக்கு எழுதியுள்ள கடிதம் பதிலளித்துள்ளது.

தமிழகத்தில் பாஜகவை வலுப்படுத்த இனியும் ரஜினிகாந்தின் வருகைக்காக காத்திருக்க முடியாது என்பதை தெளிவாக உணர்த்தியுள்ளது" என்றார்.

ஆனால் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், "ஜெயலலிதாவுக்கு, ரஜினிகாந்த் கடிதம் எழுதியுள்ளது அவரது நல் உள்ளத்தை காட்டுகிறது. மற்றபடி அவரை பாஜக எப்போதுமே வரவேற்கும்" என கூறியுள்ளார்.

மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில், ‘இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்ததற்கு வருத்தம் தெரிவிக்கிறேன். எனது ஆதரவு, அன்பு, கருணை எப்போதும் உங்களுக்கு உண்டு. வாழ்வில் பல்வேறு கடினமான நிகழ்வுகளை சந்தித்துள்ளீர்கள். அவற்றை மிகவும் தைரியத்துடன், கட்டுப்பாட்டுடன் நீங்கள் சமாளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

நீங்கள் விரைவிலேயே நிர்வாக பொறுப்புக்கு திரும்புவீர்கள் என்று உறுதியாக தெரிவிக்கிறேன். உங்கள் உடல் நலனை நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள். உங்களுக்கென்று ஏராளமான ஆதரவாளர்கள் நாடு முழுவதும் இருக்கிறார்கள் என்பதையும் ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்’ என கூறியுள்ளார்.

இது குறித்து தமிழிசை கூறுகையில், "இந்தக் கடிதம், தமிழகத்தில் பலம்பெறும் முனைப்பில் உள்ள பாஜகவுக்கு எவ்வித தடையும் ஏற்படுத்தாது. தமிழகத்தில் பாஜக நிச்சயம் பலம் பொருந்திய மாற்று சக்தியாக உருவெடுக்கும் என உறுதிபட அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT