நாகப்பட்டினம் மாவட்டம், சீர்காழியில் வீட்டில் போலி மதுபான தொழிற்சாலை தொடர்பாக பெண் உள்பட 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
சீர்காழி- பனங்காட்டாங்குடியில் சனிக்கிழமை சீர்காழி போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, ஒரு காரில் கேன்களில் எரிசாராயம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, காரிலிருந்த சீர்காழி திருஞானசம்பந்தர் நகரை சேர்ந்த கந்தசாமி மகன் குமாரை விசாரித்தபோது, போலி மதுபான ஆலை குறித்த விவரம் தெரியவந்தது. தகவலறிந்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி, போலி மதுபான ஆலை செயல்பட்ட வீட்டைப் பார்வையிட்டார். 6 மூட்டைகளில் அரசு மதுபான பாட்டில்களின் மூடிகள், 705 லிட்டர் எரிசாராயம், 3 கேன்களில் ரசாயன வண்ணப் பொடி, போலி வில்லைகள், பல்வேறு மதுபானங்களின் பெயரில் போலி ஆலோகிராம் வில்லைகள் குவித்துவைக்கப்பட்டிருந்தன.
அந்த வீட்டிலிருந்த அனைத்துப் பொருள்களையும், போலி மதுபான வகைகளைக் கடத்துவதற்குப் பயன்படுத்தியதாக இரு கார்கள், ஒரு ஆட்டோ, 3 இரு சக்கர வாகனங்கள், ரூ.2.53 லட்சம் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக குமார், வடிவேல், சந்திரசேகரன், சந்திரசேகரன் மனைவி சரசு ஆகிய 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட குமார் ஏற்கெனவே தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் இருமுறை சிறையில் அடைக்கப்பட்டவர் என்று போலீஸார் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர் அமல்ராஜ், சீர்காழி போலீஸாரை பாராட்டினார்.