ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்குப் பிறகு திருமூர்த்தி, அமராவதி அணைகளில் தூர் வாரும் பணி தொடங்கியுள்ளது. வண்டல் மண்ணை எடுத்துச்செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
உடுமலையில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருமூர்த்தி அணை 1966-ல் கட்டப்பட்டது. இதன் உயரம் 60 அடி. கொள்ளளவு 1.9 டி.எம்.சி. பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் (பிஏபி) திட்டத்தில் உள்ள 3.99 லட்சம் ஏக்கர் நிலங்கள் இதன் மூலம் பாசன வசதி பெறுகின்றன.
இதேபோல, 1957-ல் உடுமலையில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் கட்டப்பட்டது அமராவதி அணை. இதன் உயரம் 90 அடி, கொள்ளளவு 4 டி.எம்.சி. ஏறத்தாழ 55 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த அணையில் சுமார் 2 கோடி கன மீட்டர் (34 லட்சம் லோடு) அளவுக்கு வண்டல் மண் படிந்துள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
இரு அணைகளும் கட்டப்பட்டு 50 ஆண்டுகள் ஆகும் நிலையில், இதுவரை தூர் வாரப்படவில்லை. இவற்றைத் தூர் வாருமாறு கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். நிதி நெருக்கடி, அணைகளைத் தூர் வாரிய அனுபவமின்றி உள்ளிட்ட காரணங்களைக் கூறி, அணைகளைத் தூர் வாராமல் இருந்தனர்.
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன், இந்த 2 அணைகளையும் விவசாயிகளே தூர் வாரிக் கொள்ள, சில நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். இதையடுத்து, அணைகளைத் தூர் வாரும் பணி நேற்று தொடங்கியது. திருமூத்தி அணையில் தூர் வாரும் பணியை பொள்ளாச்சி எம்.பி. சி.மகேந்திரன் தொடங்கிவைத்தார்.
இதில், கோட்டாட்சியர் அ.சாதனைக்குறள், வட்டாட்சியர் கி.தயாநந்தன், செயற் பொறியாளர் வி.ராசு ஆகியோரும், அமராவதி அணையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் செயற் பொறியாளர் தர்மலிங்கம், உதவிப் பொறியாளர் பாலசுப்பிரமணியம் மற்றும் விவசாயிகள், நிலத்தடி நீர் பாதுகாப்பு விழிப்புணர்வு இயக்க நிர்வாகிகள் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
இதுகுறித்து எம்.பி. சி.மகேந்திரன் கூறும்போது, “தமிழகத்தில் முதல்முறையாக 50 ஆண்டுகள் பழமைவாய்ந்த அணைகளில் இருந்து விவசாயிகள் வண்டல் மண் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அணைகளில் தேங்கியுள்ள மண் அகற்றப்படுவதால், நீர் சேமிப்பு அதிகரிக்கும். கேரளத்தைப்போல தென்னையில் இருந்து ‘நீரா’ இறக்கவும் அரசு அனுமதித்துள்ளது. இதனால் பல லட்சம் விவசாயிகள் பலன் பெறுவர்” என்றார்.
வரம்பு மீறினால் நடவடிக்கை
உடுமலை கோட்டாட்சியர் அ.சாதனைக்குறள் கூறும்போது, “ஒரு ஹெக்டேர் நிலமுள்ள விவசாயிக்கு 30 லோடு வரை எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. அணையில் தேங்கியுள்ள மணலை எடுக்கக்கூடாது. சிறு விவசாயிகளிடமிருந்து பட்டா, சிட்டா பெற்று, அவர்கள் பெயரில் வண்டல் மண் எடுப்பதும், வெளியாட்களுக்கு விற்பதும் குற்றமாகும். மிதமான வேகத்தில் லாரிகளை இயக்க வேண்டும். போட்டிபோட்டுக் கொண்டு அதிவேகத்தில் இயக்கி விபத்து ஏற்படுத்தினாலோ அல்லது மண் ஏற்றுவதில் விதிமீறல் கண்டுபிடிக்கப்பட்டாலோ உடனடியாக அனுமதி ரத்து செய்யப்படுவதுடன், காவல் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறும்போது, “திருமூர்த்தி அணையில் இருந்து 33 ஆயிரம் கன மீட்டர் அளவும், அமராவதி அணையில் 1.31 லட்சம் கன மீட்டர் அளவும் வண்டல் மண் எடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. திருமூர்த்தி அணையில் சுமார் 4 ஆயிரம் லோடும், அமராவதி அணையில் சுமார் 20 ஆயிரம் லோடும் வண்டல் மண் எடுக்கலாம். காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மண் எடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. பொதுப்பணித் துறையிடமிருந்து முறையான அனுமதி பெற்றவர்கள் மட்டுமே மண் எடுக்க அனுமதிக்கப்படுவர்.
தலா ஒரு உதவி செயற் பொறியாளர், உதவிப் பொறியாளர், மேற்பார்வையாளர் உட்பட 6 பேர் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேவை அடிப்படையில் ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்” என்றனர்.
இயற்கை சாகுபடிக்கு உதவும்
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட நிர்வாகி எஸ்.பரமசிவம் கூறும்போது, “கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக அணைகளை தூர் வார வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகிறோம். தற்போது கிடைத்துள்ள அனுமதி, விவசாயிகளுக்கு கிடைத்துள்ள வரப்பிரசாதமாகும். அரிய சத்துகள் அடங்கிய வண்டல் மண் மூலம் இயற்கையான சாகுபடி முறையை விவசாயிகள் மேற்கொள்ளலாம். இதனால் செயற்கை உரங்களின் பயன்பாடு குறையும். உற்பத்தி அதிகரிக்கும். ஓராண்டுக்கு பிறகு இதன் நன்மை தெரியும்” என்றார்.