விலங்குகளை கொடுமைப்படுத்துவோருக்கு தற்போதைய சட்டப்படி அதிகபட்சமாக ரூ.50 மட்டுமே அபராதம் விதிக்க முடியும். எனவே, விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தை வலுப்படுத்த வேண்டும் என்று விலங்குகள் நல ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
உத்தராகண்ட் மாநிலம் டேரா டூனில் கடந்த மார்ச்சில் போலீஸா ருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், காவல்துறை குதிரை 'சக்திமான்' கொடூரமாகத் தாக்கப்பட்டது. காலில் முறிவு ஏற்பட்டதால் குதி ரைக்கு செயற்கைக் கால் பொருத் தப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சில நாட்களில் அந்தக் குதிரை உயிரிழந்தது. குதிரையை தாக்கியதாக பாஜக எம்எல்ஏ கணேஷ் ஜோஷி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட அவர், பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
சென்னை அருகே குன்றத்தூரில் உயரமான ஒரு கட்டிடத்தில் இருந்து நாய்க்குட்டியை ஒரு இளைஞர் ஈவு இரக்கமின்றி கீழே எறிந்து ரசிக்கும் வீடியோ, சமூக வலைதளங்களில் அண்மையில் வெளியானது. இந்தக் கொடுமையில் ஈடுபட்டது தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் என்பது தெரியவந்தது. காவல்நிலையத்தில் சரணடைந்த அவர்கள், உடனடியாக ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
''இந்த 2 சம்பவங்களும் வெளிப் படையாக வெளியுலகுக்கு தெரிந் தவை. அதனால்தான், விலங்கு களை கொடுமைப்படுத்தியவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப் பட்டது. பல சம்பவங்களில் நடவடிக்கையே எடுக்கப்படுவ தில்லை. 1960-ம் ஆண்டு விலங்கு கள் வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒருவர் மீது வழக்கு பதிவு செய்தால்கூட அதிகபட்சமாக ரூ.50 மட்டுமே அபராதம் விதிக்க முடியும் என்ற அவல நிலைதான் உள்ளது'' என்று ஆதங்கப்படுகின்றனர் விலங்குகள் நல ஆர்வலர்கள்.
இதுகுறித்து 'பீப்பிள் ஃபார் கேட்டில் இன் இந்தியா' அமைப்பின் நிறுவனர் ஜி.அருண் பிரசன்னா கூறியதாவது:
1960-ம் ஆண்டு விலங்குகள் வதை தடுப்பு சட்டப் பிரிவு 11-ன் கீழ் விலங்குகளை அடிப்பது, அதிக பாரத்தை ஏற்றுவது, கொடுமைப் படுத்துவது உள்ளிட்டவை குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த சட்டப்பிரிவில் குறிப்பிட்டுள்ள படி விலங்குகளை கொடுமைப் படுத்துவோருக்கு அதிகபட்சமாக ரூ.50 அபராதம் விதிக்கப்படும். இரண்டாவது முறையாகவும் விலங்கை கொடுமைப்படுத்துவது தெரியவந்தால் அதிகபட்சமாக ரூ.100 அபராதம் அல்லது 3 மாதங்கள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். இந்த தண்டனை மிக மிகக் குறைவு. எனவே, இன்றைய சூழலுக்கு ஏற்ப சட்டத்தை வலுப்படுத்த வேண்டியது அவசியமாகும்.
வலுவான தண்டனைச் சட்டம்
இன்றைக்கு பல நாடுகளில் விலங்குகள் வதை தடுப்புச் சட்டம் வேண்டும் என்று போராடி வருகின்றனர். ஆனால், இந்தியா வில் விலங்குகளின் நலனுக்காக சட்டங்கள் உள்ளன. ஆனால், அவற்றை நடைமுறைப்படுத்துவது இல்லை. போலீஸாரும் இதில் அதிக அக்கறை காட்டுவதில்லை. இதன் காரணமாகவே தண்டனை பெறுவோர் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது.
ஆனால், 1860-ம் ஆண்டு இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 429-ன் கீழ் விலங்குகளை கொன்றாலோ, கொடுமைப்படுத்தினாலோ 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை யும் அபராதமும் விதிக்க முடியும். அந்த சட்டத்தில் இருந்ததுபோல, விலங்குகளை சித்ரவதை செய்வோருக்கு அதிகபட்சமாக 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கும் வகையில் சட்டத்தை வலுப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்திய விலங்குகள் நல வாரிய துணைத் தலைவர் சின்னி கிருஷ்ணா கூறும்போது, ''கடந்த 2011-ல் புதிய விலங்குகள் நல சட்ட வரைவை மத்திய அரசிடம் சமர்ப்பித்தோம். இதுவரை அது குறித்து நடவடிக்கை எடுக்க வில்லை. 'சக்திமான்' குதிரை தாக்கப்பட்ட சம்பவத்துக்கு பிறகு ஏற்பட்ட அழுத்தம் காரணமாக, தற்போது அபராதத் தொகையை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 50 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்ட விலங்குகள் வதை தடுப்புச் சட்டம் என்பது இன் றைய காலகட்டத்துக்கு ஏற்றதாக இல்லை. 1960-இல் ரூ.50 அபராதம் என்பது பெரிய தொகை. அது இன்றைக்கு எப்படி பொருந்தும்?
கடந்த 2014-ம் ஆண்டு ஏ.நாகராஜா என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன் றம், விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர மத்திய அரசு உடனடி நட வடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது. அந்த உத்தரவுப் படி 2011-இல் அளிக்கப்பட்ட பரிந்துரைகளில் சில மாற்றங் களை மத்திய அரசிடம் தெரிவித் துள்ளோம். அதுகுறித்து, புதிதாக பொறுப்பேற்றுள்ள சுற்றுச்சூழல் துறை அமைச்சர் விரைவில் நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது'' என்றார்.