தமிழகம்

ரூ.570 கோடி வழக்கில் உண்மை வெளிவரும் வகையில் சிபிஐ விசாரணை அமைய வேண்டும்: கருணாநிதி

செய்திப்பிரிவு

திருப்பூர் அருகே ரூ. 570 கோடி பிடிபட்ட வழக்கில் மக்கள் பல்வேறு சந்தேகங்களுக்கு விடை கிடைக்கும் வகையில் சிபிஐ விசாரணை அமைய வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இரு நாட்கள் முன்பாக அதாவது கடந்த மே 13-ம் தேதி திருப்பூர் அருகே 3 கன்டெய்னர் லாரிகளில் ரூ. 570 கோடி பணம் பிடிபட்டது. இந்த வழக்கு சிபிஐ விசாரித்து எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக அறிக்கை அளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட ரூ. 570 கோடி பாரத ஸ்டேட் வங்கிக்கு (எஸ்பிஐ) சொந்தமானது என அதன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கோவை எஸ்பிஐ வங்கியிலிருந்து விசாகப்பட்டினத்துக்கு பணம் எடுத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்பட்டது.

எஸ்பிஐ சுற்றிக்கையின்படி அருகில் உள்ள வங்கியில் இருந்து தான் பணி பரிவர்த்தனை நடக்க வேண்டும். ஆனால், ஆந்திர மாநில பதிவு எண்களோடு 3 கன்டெய்னர்கள் பிடிபட்டுள்ளதால் அதற்கேற்க ஆவணங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது.

ரூ. 570 கோடி பணம் எடுத்துச் செல்லப்பட்டடபோது காவல் துறையினர் எத்தனை பேர் பாதுகாப்புக்குச் சென்றார்கள்?கோவை எஸ்பிஐ வங்கியிலிருந்து எத்தனை மணிக்கு கன்டெய்னர்கள் புறப்பட்டன? ரூபாய் நோட்டுகளை பேக்கிங் செய்ய எவ்வகையான உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டன? பணம் அனுப்புவது குறித்து ஏதாவது ஆவணங்கள் தயாரித்து அதில் கையெழுத்திடப்பட்டதா?

கன்டெய்னர் லாரிகள் பிடிபட்டபோது அவற்றுடன் ரிசர்வ் வங்கியின் பிரதிநிதி உடன் வந்தாரா? பிடிபட்ட நபர்கள் ஏன் லுங்கியுடன் இருந்தார்கள்? அவர்கள் காவல்துறையைச் சேர்ந்தவர்களா? விசாகப்பட்டினம் எஸ்பிஐ வங்கியின் பிரதிநிதி சி.பூரண சந்திரராவ் ரிசர்வ் வங்கியை அணுகி இவ்வளவு தொகை எடுத்துச் செல்லப் போவதாகத் தெரிவித்தாரா?

ரிசர்வ் வங்கியின் நெறிமுறைப்படி இந்த அளவுக்குப் பணம் பரிவர்த்தனை செய்யும்போது, இரும்புப் பெட்டிகளுக்குள் வைக்காமல் எடுத்துச் செல்லப்பட்டது ஏன்? கோவையிலிருந்து விசாகப்பட்டினம் செல்ல வேண்டுமானால் அந்த 3 லாரிகளும் சம்பந்தம் இல்லாமல் எதற்கு திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பெரமநல்லூர் - குன்னத்தூர் சாலைக்குச் சென்றன? கன்டெய்னர் லாரிகளை தடுத்து நிறுத்தியபோது நிற்காமல் சென்றது ஏன்?

ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை மீறி இரவில் இவ்வளவு பெரிய தொகையை கொண்டுச் சென்றது ஏன்? பணத்தை ஏற்றிச் சென்ற லாரிகளின் உரிமையாளர்கள், அந்த லாரிகளின் பதிவுகள் பற்றி உண்மைகளை கண்டறிய வேண்டும். பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ள இதுபோன்ற சந்தேகங்களுக்கு சிபிஐ முறையான விசாரணை நடத்தி உண்மைகளை உலகத்துக்கு அறிவிக்க வேண்டும்.

உலை வாயை மூடலாம். ஊர் வாயை மூட முடியாது. ஒவ்வொரு நாளும் இந்தப் பிரச்சினை தமிழக மக்கள் மத்தியிலும், ஊடகத்தினர் மத்தியிலும் கனன்று கொண்டிருக்கிறது.நெருப்பை பஞ்சணைக்குள் மறைத்து வைக்க முடியாது. சிபிஐயிடம் விருப்பு வெறுப்பற்ற நேர்மையான விசாரணையை மக்கள் எதிர்பார்க்கின்றனர்'' என்று கருணாநிதி கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT