உள்ளாட்சி அமைப்புகளில் எல்லா நிலைகளிலும் தலைவர்களை மக்களே நேரடியாக தேர்வு செய்யும் முறைக்கே திரும்ப வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளார் இரா.முத்தரசன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''அதிமுக ஆட்சியில் கடந்த ஜூன் மாதம் மாநகராட்சி அமைப்புளில் மேயர்களை மக்கள் தேர்ந்தெடுக்கும் உரிமை பறிக்கப்பட்டது. தற்போது உள்ளாட்சி அமைப்புகளில் நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் தலைவர்களை மக்கள் நேரடியாகத் தேர்ந்தெடுக்கும் உரிமையை தமிழ்நாடு அரசு பறித்துள்ளது.
இதன் மூலம் வேட்பாளர்களின் தகுதிப்பாடு, திறனை தங்கள் சொந்த அனுபவத்தில் மதிப்பிட்டு தேர்வு செய்யும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. மன்ற உறுப்பினர்கள் தலைவர்களை தேர்வு செய்யும் முறையில் ஊழல் முறைகேடுகள், ஆட்கடத்தல்,கலகங்கள் என சமூகவாழ்வில் தீராப்பகை வளர்த்தும் பாரதூர விளைவுகள் ஏற்படும் என்பதை அரசு கருத்தில் கொள்ளவில்லை.
தனது சொந்தக் கட்சிஅரசியல் ஆதாயத்துக்காக உள்ளாட்சி அமைப்புகளின் ஜனநாயக நடைமுறைகளை அழித்தொழிக்கும் நடவடிக்கைகளை அதிமுக அரசு கைவிட வேண்டும்.
உள்ளாட்சி அமைப்புகளில் எல்லா நிலைகளிலும் தலைவர்களை மக்களே நேரடியாக தேர்வு செய்யும் ஜனநாயக முறையைக்கு திரும்புமாறு பின்பற்றுமாறு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு மாநில அரசை வலியுறுத்துகிறது'' என்று முத்தரசன் கூறியுள்ளார்.