தமிழகத்தில் வறுமை ஒழிப்புத் திட்டப்பணிகளை செயல்படுத்த 15 மாவட்டங்களில் உள்ள 2,323 ஊராட்சிகளுக்கு, தலா ரூபாய் 10 லட்சம் ஒதுக்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று வெளியிட்டுள்ள அரசு செய்தி குறிப்பு:
மிகவும் வறிய நிலையிலுள்ளவர்களை மையப்படுத்தி, அவர்களின் வறுமை நிலைமையை அகற்றுவதற்காக தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் முந்தைய ஆட்சிக் காலத்தில், புதுவாழ்வுத் திட்டம் என்ற ஒரு திட்டம், உலக வங்கியின் நிதி உதவியுடன் 2005 ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. இத்திட்டம் தமிழகத்தின் 120 ஊராட்சி ஒன்றியங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தத் திட்டத்தின் சிறப்பான செயல்பாட்டினை தொடர்ந்து வறிய நிலையிலுள்ள அனைத்து ஏழைக் குடும்பங்களைக் கண்டறிந்து அவர்களுக்கான நிலைத்த வாழ்வாதார வாய்ப்புகளை உருவாக்குவது, அவர்களின் வாழ்வாதார நிலையை உயர்த்தி ஏழ்மையிலிருந்து அவர்கள் விடுபடும் வரை பாதுகாப்பது மற்றும் தரமான வாழ்க்கையை உருவாக்குவதற்காக தமிழகத்தின் ஏனைய 265 ஊராட்சி ஒன்றியங்களிலும் செயல்படும் வண்ணம் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் 2012-13 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டிலுள்ள ஊரகப் பகுதிகளை உள்ளடக்கிய 31 மாவட்டங்களில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்களுக்கு 5 முதல் 7 வருடங்களுக்கு நீடித்த தன்மையுடைய வாழ்வாதார வாய்ப்புகளை உருவாக்குவது இந்த இயக்கத்தின் உயரிய நோக்கமாகும். ஏழை மக்களுக்கான அமைப்புகளை உருவாக்கி, அவற்றின் மூலமாக ஏழை மக்கள் நிதி ஆதாரங்கள் பெறுதல், வாழ்வாதாரத்திற்கு தேவையான உதவிகள், பொதுச் சேவைகள் மற்றும் அரசினால் வழங்கப்பட வேண்டிய உரிமைகள் ஆகியவற்றைப் பெற்றுத் தருவதில் இந்த இயக்கம் முனைப்புடன் செயல்படுகிறது. இவ்வியக்கத்தின் நடவடிக்கைகளை செயல்படுத்துவதற்காக மாநில, மாவட்ட, வட்டார மற்றும் தொகுதி அளவில் தனி நிர்வாக அமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் 2012-13 ஆம் ஆண்டு முதல் மூன்று கட்டங்களாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த இயக்கத்தின் திட்டங்களை செயல்படுத்த முதற்கட்ட மாவட்டங்களான கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, நாகப்பட்டினம், நீலகிரி, பெரம்பலூர், அரியலூர், ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவண்ணாமலை, திருவாரூர், திருச்சிராப்பள்ளி, வேலூர், விழுப்புரம் என மொத்தம் 15 மாவட்டங்களில் உள்ள
2,323 ஊராட்சிகளில் கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்களை அமைக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
மக்கள் நிலை ஆய்வின் மூலம் ஏழைகள், மிகவும் ஏழைகள், நலிவுற்றோர், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் கண்டறியப்பட்டு, இவர்களின் வாழ்வாதாரம் உயரவும், வாழ்க்கைத் தரம் மேம்படவும், சமூகத்தில் இவர்கள் உயரிய நிலையினை அடைவதற்கும் மற்றும் சொந்தத் தொழில் புரிபவர்களுக்கும் கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மூலம் நிதியுதவி வழங்கிட, இச்சங்கங்களுக்கு சமுதாய முதலீட்டு நிதியாக 2,323 ஊராட்சிகளுக்கு, ஊராட்சி ஒன்றுக்கு 10 லட்சம் ரூபாய் என மொத்தம் 232 கோடியே 30 லட்சம் ரூபாய் நிதியினை விடுவித்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
அரசின் இந்த நடவடிக்கைகள் மூலம் ஏழை, எளிய மக்களின் வாழ்வாதார நிலையில் ஏற்றம் ஏற்பட வழிவகை ஏற்படும் என்று அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.