ஆளுநர் மாளிகை முன்பு தற்கொலை போராட்டம் நடத்த சென்ற விவசாய சங்கத்தினர் தாம்பரம் ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டனர்.
முதலமைச்சரை நியமிக்க வேண்டும் அல்லது ஆளுநர் ஆட் சியை அமல்படுத்த வேண்டுமென வலியுறுத்தி ஆளுநர் மாளிகை முன்பு தற்கொலை செய்யும் போராட் டம் நடத்தப்போவதாக திருச்சியில் நடைபெற்ற குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நேற்று மனு அளிக்கப்பட்டது.
இதனையடுத்து நேற்று திருச்சியில் இருந்து பல்லவன் விரைவு ரயில் மூலம் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 25-க்கும் மேற்பட்ட விவசாயிகள் வந்தனர். தாம்பரம் ரயில் நிலையம் வந்து மின்சார ரயில் மூலம் கிண்டி சென்று ஆளுநர் மாளிகை முன்பு போராட்டம் நடத்த திட்டமிட்டனர். இந்நிலையில் தாம்பரம் வந்த அவர்களை தாம்பரம் போலீஸார் கைது செய்தனர். அப்போது போலீ ஸாருக்கும் விவசாயிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ரயில் நிலையத்தில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
இது குறித்து அய்யாக்கண்ணு ‘தி இந்து’விடம் கூறியதாவது:
தற்போது தமிழக அரசு முடங்கி உள்ளதால் விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்காமல் மனமுடைந்து தற்கொலை செய்யும் நிலையில் உள்ளனர். இவர்களுக்கு வறட்சி நிவாரண நிதி இதுவரை கிடைக்கவில்லை.
புதிய அரசுக்கு கோரிக்கை
அதிகாரிகள் நிவாரணம் தர மறுக்கிறார்கள். இதனால் தமிழக அரசே ஸ்தம்பித்துள்ளது. இதனைக் கண்டித்து ஆளுநர் மாளிகை முன்பு தூக்கு மாட்டி தற்கொலை செய்யும் போராட்டம் நடத்த வந்தோம். ஆனால், போலீஸார் எங்களை கைது செய்தனர். தற்போது பதவி ஏற்றுள்ள புதிய அரசு விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்க்க விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.