சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் பொங்கல் சிறப்பு பஸ்களில் டிக்கெட் முன்பதிவு செய்ய கூடுதலாக 15 சிறப்பு கவுன்ட்டர்களை போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.
முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவுப்படி வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் 10-ம் தேதி முதல் 13-ம் தேதி வரையில் 6,514 சிறப்புப் பஸ்கள் இயக்கப்படும் என்று அறிவித்தார்.
அதன்படி, சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் பொதுமக்கள் டிக்கெட் முன்பதிவு செய்ய சிறப்பு கவுன்ட்டர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே, 10 கவுன்ட்டர்கள் உள்ள நிலையில், போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில்பாலாஜி வெள்ளிக்கிழமை 15 சிறப்பு கவுன்ட்டர்களை தொடங்கி வைத்தார். பின்னர், அங்குள்ள அரசு விரைவு பஸ்கள் மற்றும் டிக்கெட் கவுன்ட்டர்களில் ஆய்வு நடத்தினார்.
இது தொடர்பாக போக்குவரத்துத் துறையின் உயர் அதிகாரிகள் கூறியதாவது:
இந்த ஆண்டில் பொங்கலுக்கு ஊருக்கு செல்ல இதுவரையில் 27 ஆயிரம் பேர் இணையதளம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். இதனால் அரசுக்கு ரூ.1 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
பஸ்களை ஒழுங்குபடுத்தி இயக்கும் வகையில் மொத்தம் 175 போக்குவரத்துத் துறை அதிகாரிகள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள், பொதுமக்களுக்கு ‘மைக்’ மூலம் ஆலோசனைகளை வழங்குவார்கள்.
கோயம்பேடு பஸ் நிலையத்தில் உள்ள 6 நடைமேடைகளில் 1, 2 நடைமேடைகளில் டிக்கெட் முன்பதிவு செய்யாத மக்களின் வசதிக்காக பஸ்கள் இயக்கப்படும். மேலும், 3, 4, 5, 6 ஆகிய நடைமேடைகளில் டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். இதேபோல், தற்காலிகமாக உருவாக்கப்பட்டுள்ள 7, 8, 9 நடைமேடைகளிலும் டிக்கெட் முன்பதிவு செய்யாதவர்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் கூறினர்.
1,325 சிறப்பு பஸ்கள் இயக்கம்
சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை 600 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. பொங்கல் பண்டிகை நெருங்கவுள்ள நிலையில், 11-ம் தேதி (இன்று) 1,325 சிறப்பு பஸ்களும், 12-ம் தேதி 1,175 சிறப்பு பஸ்களும் இயக்கப்படவுள்ளன. இதேபோல், வரும் 13-ம் தேதி 339 சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளன.