தமிழகம்

கெயிலுக்கு ஆதரவான தீர்ப்பு: மீண்டும் பீதியில் விவசாயிகள்!

கா.சு.வேலாயுதன்

தமிழகத்தின் 7 மாவட்டங்கள் வழியாக எரிவாயுக் குழாய் அமைக்கும் கெயில் நிறுவனத்தின் திட்டத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இது கோவை மண்டல விவசாயிகள் மத்தியில் மீண்டும் பீதியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

கொச்சியில் இருந்து மங்களூருக்கு தமிழகத்தின் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் வழியாக எரிவாயு குழாய் அமைக்கும் பணிகளை கெயில் நிறுவனம் தொடங்கியது. எரிவாயு குழாய் அமைப்பதால் தங்களது விளைநிலங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக விவசாயிகள் தமிழக அரசிடம் முறையிட்டனர்.

இதையடுத்து, மாற்று வழியில் இத் திட்டத்தை செயல்படுத்த கெயில் நிறுவனத்துக்கு தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இந்தப் பகுதிகளில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் ஓரங்களில் குழாய்கள் பதிக்கலாம் என்றும் யோசனை கூறியிருந்தது.

இதனை எதிர்த்து கெயில் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. மத்திய அரசுக்குச் சொந்தமான தேசிய நெடுஞ்சாலைகளில் எரிவாயுக் குழாய் அமைக்க கெயில் நிறுவனத்துக்கு உத்தரவிட மாநில அரசுக்கு உரிமையில்லை. எனவே, கெயில் நிறுவனம் தனது பணியைத் தொடரலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

கொதித்தெழும் விவசாயிகள்

இதையடுத்து, இந்த 7 மாவட்ட விவசாயிகள் தரப்பில் மீண்டும் பரபரப்பு கிளம்பியது. ‘கெயிலை எங்கள் நிலங்களுக்குள் நுழைய விடமாட்டோம்’ என்று குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.

இது குறித்து கோவை மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் வழுக்குப்பாறை பாலு கூறியது:

‘இந்த தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய உள்ளோம். எரிவாயு குழாய் பதிக்கும் பணியை நாங்கள் எதிர்க்கவில்லை. எங்கள் விவசாய நிலங்கள் பாதிக்காத அளவுக்கு அதைக் கொண்டு போக வழியிருந்தும், அதைச் செய்யாமல் எங்கள் நிலங்களுக்குள்ளேயே குழாய் பதிக்கிறார்கள், அதையே நாங்கள் எதிர்க்கிறோம். அதையெல்லாம் மீறி எங்கள் நிலங்களுக்குள் கெயில் அதிகாரிகள் அத்துமீறி நுழைந்தால் எங்கள் போராட்டம் முன்பைவிட பெரிய அளவில் இருக்கும்’ என்றார்.

மறுஆய்வு மனு

விவசாயிகள் கூட்டமைப்பு நிர்வாகிகளில் ஒருவரான கந்தசாமி கூறுகையில், ‘இப்போது வந்த தீர்ப்பில் சில அம்சங்கள் கவனிக்கப்படாமல் இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டி இதே நீதி மன்றத்தில் வழக்கை மறுஆய்வு செய்ய ஒரு மனு போட்டிருக்கிறோம்.

தமிழக அரசும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து விவசாயிகளின் வாழ்வாதா ரங்களை காக்கும் என்று நம்புகிறோம்’ என்றார்.

SCROLL FOR NEXT