தமிழகம்

கைபேசி செயலி மூலம் மின் கட்டணம் செலுத்தும் வசதி விரைவில் அறிமுகம்: அமைச்சர் தங்கமணி அறிவிப்பு

செய்திப்பிரிவு

சட்டப்பேரவையில் நேற்று எரிசக்தி மற்றும் மதுவிலக்குத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து பேசியபோது மின் துறை அமைச்சர் பி.தங்கமணி வெளியிட்ட சில அறிவிப்புகள்:

விரைவு (தட்கல்) மின் இணைப்பு திட்டத்தில், 5 குதிரைத்திறன் மோட்டாருக்கு ரூ.2.5 லட்சம், 7.5 குதிரைத்திறனுக்கு ரூ.2.75 லட்சம், 10 குதிரைத்திறனுக்கு ரூ.3 லட்சம் வீதம் ஒருமுறை கட்டணம் செலுத்தும் 10 ஆயிரம் விண்ணப்பதாரர்களுக்கு 6 மாதத்துக்குள் இலவச மின்சாரம் வழங்கப்படும்.

கைபேசி செயலி வழியாக மின் கட்டணம் செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்படும். தற்போது இயக்கத்தில் உள்ள ‘1912’ எனும் மின்தடை பழுது நீக்கும் சேவை, கட்டணமில்லா தொலைபேசி வசதியாக மாற்றப்படும். சிறு, குறு தொழில்முனைவோரை ஊக்குவிக்க, 112 கிலோவாட் வரையிலான புதிய மின்மாற்றி தேவைப்படாத மின் இணைப்புகளுக்கு 15 தினங்களுக்குள் மின் இணைப்பு வழங்கப்படும்.

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் ரூ.52 கோடி மதிப்பில், புதுப்பித்தல் மற்றும் நவீனமாக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அமைச்சர் அறிவித்தார்.

SCROLL FOR NEXT