எண்ணூர் துறைமுகம் அருகே கடல் நீரில் மிதக்கும் எண்ணெய் படலத்தை அகற்றும் பணியை மத்திய, மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்கள் ஆய்வு செய்து, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக மீனவர் சங்க நிர்வாகிகள் கே.ஆர்.செல்வராஜ்குமார், எம்.ஆர்.தியாகராஜன் ஆகியோர் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
எண்ணூர் பகுதியைச் சுற்றி 21 மீனவ கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களின் வாழ்வாதாரம் கடலை நம்பியே உள்ளது. கடந்த ஜனவரி 28-ம் தேதி அதிகாலை எண்ணூர் துறைமுகத்திலிருந்து 2 கடல் மைல் தொலைவில், எம்.டி.மாப்ளே, எம்.டி.டான் காஞ்சிபுரம் ஆகிய இரு கப்பல்களும் மோதிக்கொண்டதில், டான் காஞ்சிபுரம் கப்பலில் இருந்த பெட்ரோலிய எண்ணெய் கடலில் கொட்டியது. அந்த எண்ணெய், கடலோரப் பகுதிகளான புளிகட், எண்ணூர், எர்ணாவூர், திருவொற்றியூர், காசிமேடு, கொசஸ்தலையார் ஆற்றங்கரை, பக்கிங்ஹாம் கால்வாய், அப்பகுதியில் உள்ள சதுப்புநிலக் காடு, பறவைகள் சரணாலயம் மற்றும் வடக்கு பகுதியில் திருவான்மியூர் வரை பரவி, கடுமையான மாசுவை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கடல் வளம், மீன் மற்றும் கடலில் உள்ள பல்வேறு நுண்ணுயிரினங்கள் அழிந்துள்ளன.
எனவே, காமராஜர் துறைமுகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில், கடலில் மிதக்கும் எண்ணெய் படலத்தால் ஏற்பட்ட பாதிப்பை, உலக அளவில் உள்ள தொழில்நுட்பத்தின் மூலம் மறுசீரமைக்க வேண்டும். உடனடியாக நிபுணர் குழு ஒன்றை நியமித்து, எண்ணெய் படலத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை ஆராய வேண்டும். அவர்கள் அளிக்கும் அறிக்கை அடிப்படையில், பாதிக்கப்பட்ட மீனவர்கள் உள்ளிட்டோருக்கு இழப்பீடு வழங்க வேண்டும். எண்ணெய், காஸ் போன்றவற்றை ஏற்றி வரும் சரக்கு கப்பல்களை கையாள காமராஜர் துறைமுகத்துக்கு தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு அமர்வின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி பி.ஜோதிமணி, தொழில்நுட்ப உறுப்பினர் பி.எஸ்.ராவ் ஆகியோர் முன்னிலை யில் நேற்று விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “ஈரான், ஈராக் போன்ற நாடுகளில் இதுபோன்ற எண்ணெய் கசிவு ஏற்பட்டால், கடலில் தடுப்பு அரணை ஏற்படுத்தி, எண்ணெய் பரவாமல் உடனே தடுக்கின்றனர். இங்கு அதுபோன்று எந்த நடவடிக்கையையும் எடுக்காமல், எண்ணெய் பரவ விடப்பட்டுள்ளது. இதனால் கடும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும்” என்றார்.
அப்போது தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தரப்பு வழக்கறிஞர் யாஸ்மின் அலி ஆஜராகி, “எண்ணெய் படலத்தை அகற்றுவது தொடர்பாக தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் தலைமையில் உயர்மட்ட அதிகாரிகள் கூட்டம் நடத்தப்பட்டு, பணிகள் விரைவு படுத்தப்பட்டுள்ளன. அப்பணி களை மாசுக் கட்டுப்பாட்டு வாரிய நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்” என்றார்.
அதனைத் தொடர்ந்து, “இந்த வழக்கில் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், எதிர்மனுதாரராக சேர்க்கப்படுகி றது. எண்ணெய் படலத்தை அகற்றும் பணி தொடர்பாக மத்திய, மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்கள் இணைந்து ஆய்வு செய்து, அறிவியல் ரீதியிலான விவரங்களுடன் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என்று அமர்வின் உறுப்பினர்கள் உத்தரவிட்டனர்.
மனு மீதான விசாரணை பிப்ரவரி 20-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.