தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 20 நாட்கள் இருக்கிற நிலையில், ஆம்னி பேருந்துகள் பயணிகளிடம் தங்கள் வசூலைத் தொடங்கியுள்ளன.
சென்னை மற்றும் அதனைச் சுற்றி உள்ள பகுதிகளில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்களில் பெரும்பாலோர், பிற மாவட்டங்களைச் சேர்ந்தோர். இவர்களில் கணிசமானோர், தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். இதனை பயன்படுத்தி ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியின் போது, பொதுமக்களிடம் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் அதிகப் பணம் வசூலிப்பது வழக்கம்.
அடுத்த மாதம் 2-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் வரும் 30, 31 மற்றும் அடுத்த மாதம் 1- ம் தேதி ஆகிய நாட்களில் தெற்கு மற்றும் மேற்கு மாவட்ட பகுதிகளுக்கு செல்லும் ரயில்களில் முன்பதிவு முடிந்துவிட்டன. அதுபோல் அரசு விரைவு பஸ்களில் பயணிப்பதற்கான முன் பதிவுகளும் முடியும் தருவாயில் உ ள்ளன. இதைத் தொடர்ந்து ஆம்னி பேருந்துகள் இந்த ஆண்டும் பயணிகளிடம் அதிக கட்டணத்தை வேட்டையாட தொடங்கி விட்டன.
இதுகுறித்து, சமூக ஆர்வலர் ஒருவர் தெரிவித்ததாவது: அரசு சொகுசு பேருந்துகளில் பயணிக்க திருச்சிக்கு ரூ.260, மதுரைக்கு ரூ.350, திருநெல்வேலிக்கு ரூ. 465, கன்னியாகுமரிக்கு ரூ.530, கோயம்புத்தூருக்கு ரூ.420 என, கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், ஆம்னி சொகுசு பேருந்துகளில் திருச்சிக்கு ரூ.500, மதுரைக்கு ரூ.560, திருநெல் வேலிக்கு ரூ.630, கன்னியா குமரிக்கு ரூ.690, கோயம்புத்தூ ருக்கு ரூ.580 என, கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இந்த நிலையில், பிரபலமான ஆம்னி பஸ் நிறுவனங்களில், வழக்க மான பஸ்களில் தீபாவளிக்கான முன் பதிவு முடிந்துவிட்டது. இனி வாய்ப்பில்லை என்கிறார்கள். மற்ற நிறுவனங்களிலோ, சிறப்பு பஸ்கள் விட உள்ளோம். அதற்கு ஆ ன்-லைனில் முன் பதிவு செய்யுங்கள் என்கிறார்கள். ஆன்- லைன் முன் பதிவில் திருநெல்வேலிக்கு ரூ. 1200, திருச்சிக்கு ரூ.700, ரூ 1000 என்கிற ரீதியில் அதிக கட்டணம் வசூலிக்கிறார்கள்.
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 20 நாட்கள் இருக்கிற நிலையில், பயணிகளிடம் அதிக கட்டணத்தை வேட்டையாட ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் இப்போதே தொடங்கிவிட்டார்கள். இதைத் தடுக்க போக்குவரத்துத் துறை உரிய நடவடிக்கையை எடுக்கவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.