தமிழகம்

மகாராஷ்டிர தமிழர் பகுதிகளில் தமிழக பாஜகவினர் பிரச்சாரம்: தேசிய செயலாளர் எச்.ராஜா தகவல்

செய்திப்பிரிவு

மகாராஷ்டிர மாநில சட்டசபை தேர்தலையொட்டி தமிழர்கள் வாழும் பகுதிகளில் தமிழ்நாட்டை சேர்ந்த பாஜகவினர் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளனர். இதற்காக பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா இன்று மும்பை புறப்படுகிறார்.

பிரதமர் நரேந்திர மோடியின் ‘ஸ்வாட்ச் பாரத்’ என்னும் தூய்மையான இந்தியா திட்டம் சென்னை வடபழனி பேருந்து நிலையத்தில் நேற்று செயல்படுத்தப்பட்டது. இதனை பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தொடக்கி வைத்து சுத்தம் செய்தார். இதுகுறித்து எச்.ராஜா ‘தி இந்து’விடம் கூறும்போது, “ பிரதமர் மோடி அறிமுகப்படுத்திய ‘ஸ்வாட்ச் பாரத்’ திட்டம் நல்லமுறையில் பிரபலமடைந்து வருகிறது. இதனை செயல்படுத்தும் விதமாக நான் மற்றும் 100-க்கும் அதிகமான பாஜகவினர் வடபழனி பேருந்து நிலையத்தை சுத்தம் செய்தோம். இதுமட்டுமன்றி பயணிகளிடம் இந்த திட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்புவிடுத்தோம்.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான தீர்ப்பை தொடர்ந்து அதிமுகவினர் பொதுமக்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்தி வருகிறார்கள். இது அதிமுக மீது வெறுப்பை உண்டாக்கும். மகாராஷ்டிராவில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இதற்காக 6 நாட்கள் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளேன். தமிழர் பகுதி மட்டுமன்றி எல்லா இடங்களிலும் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளேன். தமிழக பாஜகவினரும் அங்கு பிரச்சாரம் செய்யவுள்ளனர். கோலிவாடா தொகுதியில் தமிழகத்தின் புதுகை மாவட்டத்தை சேர்ந்த தமிழ்ச்செல்வம் என்பவர் வேட்பாளராக போட்டியிடுகிறார். அவரை ஆதரித்தும் தீவிர பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT