தமிழகம்

ஜிஎஸ்டி சாலை ரயில் நிலையத்தை இணைத்து தாம்பரத்தில் எஸ்கலேட்டர் வசதியுடன் நடை மேம்பாலம்: ரூ.20 கோடியில் நெடுஞ்சாலைத் துறை அமைக்கிறது

செய்திப்பிரிவு

தாம்பரம் ரயில் நிலையத்தையும் ஜிஎஸ்டி சாலையையும் இணைக் கும் வகையில் ரூ.20 கோடியில் எஸ்கலேட்டர் வசதியுடன் கூடிய நடை மேம்பாலத்தை நெடுஞ்சாலைத் துறை அமைக் கவுள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளன.

சென்னை மாநகரின் முக்கிய நுழைவுப் பகுதிகளில் ஒன்று தாம்பரம். தென் மாவட்ட ரயில்கள் நின்று செல்லும் முக்கிய ரயில் நிலையமாகவும் இது உள்ளது. ஏராளமான அரசு, தனியார் பேருந்துகளும் தாம்பரம் வழியாக வெளியூர்களுக்குச் செல்கின்றன. இது மட்டுமின்றி, புறநகர் பகுதியில் தொழில் நிறுவனங்கள், குடியிருப்புகளும் அதிகரித்து வருவதால், தாம்பரம் எப்போதும் மக்கள் கூட்டம் நிறைந்த பகுதியாக உள்ளது.

ஆனால், மக்கள்தொகை மற்றும் வாகனப் பெருக்கத்துக்கு ஏற்ப சாலைகள் அகலமாக இல்லை. சாலைகள் குறுகலாக இருப்பதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வாகனங்கள் தேங்கி, நீண்ட தூரத்துக்கு நிற்கும் நிலை ஏற்படுகிறது. இதனால், பரபரப்பான காலை, மாலை நேரங்களில் சாலையைக் கடக்க முடியாமல் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதியினர் கூறும்போது, ‘‘சரியான திட்டமிடல் இல்லாததால் தாம்பரம் ரயில் நிலையம், பேருந்து நிலையம், மார்க்கெட் பகுதிகளில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த சாலையைக் கடந்து செல்லவே 20 நிமிடங்கள் ஆகிறது. வயதானவர்கள், குழந்தைகளை அழைத்துச் செல்ல கஷ்டமாக இருக்கிறது. இதனால், சில நேரங்களில் விபத்துகளும் நடக்கின்றன. எனவே, மக்கள் நடந்து செல்ல வசதி ஏற்படுத்தி தரவேண்டும்’’ என்றனர்.

இதுதொடர்பாக கேட்டபோது, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

சென்னையில் மக்கள் கூட்டம், வாகனப் போக்குவரத்து மிகுந்த இடங்களில் மக்கள் எளிதாக சாலையைக் கடந்துசெல்ல எஸ்கலேட்டர் வசதியுடன் கூடிய நடை மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது.

ஏற்கெனவே 5 இடங்களில் இந்த வசதி இருக்கிறது. இந்நிலையில், தாம்பரத்திலும் ரூ.20 கோடி செலவில் புதிய நடை மேம்பாலம் அமைக்கப்படுகிறது. 2 புறமும் மொத்தம் 4 எஸ்கலேட்டர் அமைக்கப்படும்.

ஜிஎஸ்டி சாலையில் இருந்து நேரடியாக தாம்பரம் ரயில் நிலையத்துக்கு செல்லும் வகையில் வசதி கொண்டுவரப்படும். இதற்காக ரயில்வேயுடன் இணைந்து பணியாற்ற உள்ளோம். இதற்கான பணிகள் தற்போது நடந்துவருகின்றன. அடுத்த சில வாரங்களில் டெண்டர் விடப்படும். டெண்டர் இறுதி செய்யப்பட்டு அடுத்த 6 மாதங்களில் பணிகள் முடிக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

SCROLL FOR NEXT