சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விதிப்பு முறை அமல்படுத்துவதால் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு செலவு அதிகரிக்கும் என மத்திய அரசு செயலாளர் கே.கே.ஜலான் கூறினார்.
இந்திய ஏற்றுமதி மேம்பாட்டு மையம் (பியோ), இந்திய-அமெரிக்க வர்த்தக சபை இணைந்து ‘இந்திய-அமெரிக்க வர்த்தகத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர (எம்.எஸ்.எம்.இ.) நிறுவனங்களின் பங்களிப்பை உயர்த்துதல்’ என்ற தலைப்பில் கருத்தரங்கு சென்னையில் நடைபெற்றது. இதில், மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை செயலாளர் கே.கே.ஜலான் பேசும்போது, ‘‘சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறை அமல்படுத்துவதால் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு செலவு அதிகரிக்கும்.
மேலும், இந்த ஜிஎஸ்டி வரியால் ஒரு கோடி விற்றுமுதல் கொண்ட நிறுவனங்களுக்கும், ஆயிரம் கோடி விற்றுமுதல் கொண்ட நிறுவனங்களுக்கும் ஒரே மாதிரியான விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இது குறித்து மத்திய நிதியமைச்சகத் திடம் விவாதிப்பேன்’’ என்றார்.
நிகழ்ச்சியில் பேசிய இந்திய ஏற்றுமதி மேம்பாட்டு மையத்தின் தென்மண்டல தலைவர் டாக்டர் ஏ.சக்திவேல் பேசும்போது, ‘‘விவசாயத்துக்கு அடுத்தபடியாக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறையில்தான் தொழிலாளர்கள் அதிகளவில் உள்ளனர். 26.1 மில்லியன் தொழில் நிறுவனங்களில் 59.7 மில்லியன் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.
சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள போட்டி காரணமாக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு அதிக நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எனவே, இத்துறை நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை அதிக தரத்துடனும், மதிப்புக் கூட்டும் வகையிலும் தயாரிக்க வேண்டும். இத்துறையை வலுப்படுத்த வேண்டும்’’ என்றார்.
விவசாயத்துக்கு அடுத்தபடியாக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறையில்தான் தொழிலாளர்கள் அதிகளவில் உள்ளனர். 26.1 மில்லியன் தொழில் நிறுவனங்களில் 59.7 மில்லியன் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.